PUBLISHED ON : செப் 06, 2025 12:00 AM

'தேர்தல் நெருங்கியதும், ஆன்மிகத்தின் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு திடீர் பாசம் வந்து விட்டதா...?' என கொதிக்கிறார், கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வி.சதீஷன்.
கேரளாவில், மா. கம்யூ., கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜய ன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. அரசு கட்டுப்பாட்டில் உள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டின், 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு, வரும் 20ல் பம்பையில், 'சர்வதேச அய்யப்ப சங்கமம்' என்ற மாநாடு நடக்கவுள்ளது.
இதில், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான ஆன்மிக தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்; கேரள அரசு தான் இந்த விழாவை நடத்துகிறது.
இதை, சதீஷன் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், 'சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, 10 முதல், 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பினராயி விஜயன் அரசு, 2018ல் இந்த விஷயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி, சபரிமலை மரபுக்கு களங்கத்தை விளைவித்தது.
'அடுத்தாண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், அய்யப்ப பக்தர்களின் ஓட்டுகளை பெறுவதற்காக, பினராயி விஜயன் இப்போது அய்யப்ப சங்கமம் நடத்தப் போவதாக நாடகமாடுகிறார். அவரது இரட்டை வேடம், அனை வருக்கும் தெரிந்த விஷயம் தான்...' என, ஆவேசப்படுகிறார்.