PUBLISHED ON : ஜன 14, 2024 12:00 AM

கவுரவ தோல்விபோதும்
'மறுபடியும்
வேதாளம் முருங்கை மரத்தில் ஏறி விட்டது...' என மேற்கு வங்க முதல்வரும்,
திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி பற்றி கூறுகின்றனர், அந்த
மாநிலத்தில் உள்ள காங்., கட்சியினர்.
இங்கு ஒரு காலத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்தபோது, பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது காங்கிரஸ்.
திரிணமுல்
கட்சியை மம்தா துவங்கியதும், காங்கிரஸ் கரைந்து விட்டது. மேற்கு
வங்கத்தில் பா.ஜ., வளரத் துவங்கியதும், மார்க்சிஸ்ட் கட்சிக்கும், அங்கு
செல்வாக்கு இல்லாமல் போய் விட்டது.
எப்படியாவது காங்., கட்சியை
மீண்டும் மேற்கு வங்கத்தில் துளிர்விடச் செய்ய, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
உள்ளிட்ட நிர்வாகிகள் பெரும் முயற்சி செய்து வருகின்றனர்.
வரும்
லோக்சபா தேர்தலில், 'இண்டியா' கூட்டணி சார்பில் போட்டியிட்டு கணிசமான
தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என, அவர்கள் வியூகம் வகுத்து வருகின்றனர்.
இந்த மாநிலத்தில், மொத்தம் 42 லோக்சபா தொகுதிகள் உள்ளன. ஆனால்,
திரிணமுல் தலைவர் மம்தா, 'இண்டியா கூட்டணியில் காங்கிரசுக்கு இரண்டு
இடங்களுக்கு மேல் தர முடியாது...' என, திட்டவட்டமாக கூறி விட்டார்.
இதனால்,
கடும் அதிருப்தியில் உள்ள மேற்கு வங்க காங்., நிர்வாகிகள், 'உங்களிடம்
கூட்டணி சேர்ந்து, ஓரிரு தொகுதியில் போட்டியிட்டு, அவமானப்படுவதை விட,
எல்லா தொகுதியிலும் தனித்து நின்று, கவுரவமாக தோல்வி அடைவதே மேல்...' என்ற
முடிவுக்கு வந்துள்ளனர்.
பொம்மை பஸ் வேண்டாம்!
'இது என்ன வம்பாக இருக்கிறது;
போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகிப்பது ஒரு குற்றமா...' என
புலம்புகிறார், கேரள மாநில அமைச்சர் கணேஷ் குமார். இவர், ஏராளமான
மலையாள திரைப்படங்களிலும், 'டிவி' தொடர்களிலும் நடித்துள்ளார்.
தன் தந்தை பாலகிருஷ்ண பிள்ளை துவக்கிய, கேரள காங்கிரஸ் - பி என்ற
கட்சியின் தலை வராகவும் தற்போது உள்ளார். பத்மநாபபுரம் சட்ட
சபை தொகுதியில், தொடர்ந்து ஐந்து முறை வெற்றி பெற்றவர் என்ற
பெருமையும் இவருக்கு உண்டு. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அந்த
கூட்டணியில் இடம் பிடித்து, எப்படியாவது அமைச்சராகி
விடுவார்.தற்போதைய மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் பினராயி விஜயன்
தலைமையிலான அரசில், சமீபத்தில் இவர், போக்குவரத்து துறை
அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இவருக்கு வாழ்த்து தெரிவிக்க
வந்த பலரும், வாகனங்களை போன்ற பொம்மைகளை பரிசாக தந்தனர்.
குறிப்பாக, பொம்மை பஸ்களை பரிசாக அளித்தனர். அலமாரியில் வைக்க
முடியாத அளவுக்கு தொடர்ந்து பொம்மை பரிசுகள் குவிகின்றன.
இதனால்
கடுப்பான கணேஷ் குமார், 'போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தால்,
பொம்மை பஸ்களைத் தான் பரிசளிக்க வேண்டுமா... புத்தகங்கள், சால்வை
போன்றவற்றை பரிசளித்தால், யாருக்காவது உதவும்...' என,
கூறியுள்ளார்.
மேலும், 'இனி பொம்மை பஸ்களுடன் யாராவது வந்தால்,
வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள்...' என, பாதுகாவலர்களுக்கு
உத்தரவிட்டுள்ளார்.
காலம் முழுதும் எதிர்க்கட்சி!
'எப்போது வேண்டுமானாலும், நம்மை கழற்றி விடுவார்...' என, தன்னைப் பற்றி காங்., தலைவர்கள் பேசுவதால், எரிச்சலுக்கு ஆளாகியுள்ளார், பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமார்.காங்கிரஸ், தி.மு.க., ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், திரிணமுல் உள்ளிட்ட, 28 கட்சிகள் இணைந்து, 'இண்டியா' என்ற பெயரில், பா.ஜ.,வை வீழ்த்துவதற்காக கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியின் தலைவர் யார் என, இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தொகுதி பங்கீடு பிரச்னையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை விட, கூட்டணி தலைவரை முடிவு செய்வதில் தான், அதிக கருத்து வேறுபாடு எழுந்துள்ளது.
இந்த கூட்டணி அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர், நிதீஷ் குமார். அதனால், அவரையே தலைவராக நியமிக்க வேண்டும் என, பெரும்பாலான கட்சியினர் விரும்புகின்றனர். ஆனால், காங்., தலைவர்களுக்கு இதில் விருப்பமில்லை. 'நிதீஷ் குமார் ஏற்கனவே பா.ஜ., கூட்டணியில் அங்கம் வகித்தவர். அவரை நம்ப முடியாது; அடிக்கடி கூட்டணி தாவுபவர். முக்கியமான நேரத்தில் கவிழ்த்து விடுவார்...' என கூறி வருகின்றனர்.
இதைக் கேள்விப்பட்டதில் இருந்து, நிதீஷ் குமார் அதிருப்தியில் உள்ளார். 'பா.ஜ.,வை வீழ்த்த வேண்டும் என்ற அக்கறை இருந்தால், இப்படி பேச மாட்டார்கள். ஒருமித்த முடிவு ஏற்படுவதற்கு முன், முட்டுக்கட்டை போட்டால் விளங்குமா... காலம் முழுதும், காங்கிரஸ் எதிர்க்கட்சியாகவே இருக்க வேண்டியது தான்...' என, புலம்புகிறார்.

