PUBLISHED ON : ஜன 10, 2026 03:18 AM

அ.குணா,
கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இன்றைய தமிழக
அரசியல்வாதிகளிடையே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக தலைவர் வைகோவை
போன்று, மிசா, தடா, பொடா என்று, அனைத்து விதமான அடக்குமுறை சட்டங்களுக்கு
எதிராக குரல் கொடுத்து, சிறை சென்றவர் எவரும் இல்லை..
தி.மு.க.,விலிருந்து விலகி, ம.தி.மு.க., என்ற கட்சியை துவக்கிய போது,
தி.மு.க., - அ.தி.மு.க., இரு கட்சிகளுக்கும் மாற்று சக்தியாக திகழ்வார்
என்று தமிழக மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ஊழலுக்கு எதிராக நடைபயணம்
சென்ற வைகோ, அடுத்து வந்த சட்டசபை தேர்தலில், ஜெயலலிதாவுடன் கூட்டணி
அமைத்து, தானும் ஒரு தேர்தல் அரசியல் வியாபாரி என்பதை நிரூபித்தார்.
அதுமட்டுமா... வாரிசு அரசியலுக்கு எதிராக போர்க்கொடி துாக்கி, அதனால் கொலை
பழி சுமத்தப்பட்டு, எந்த வாரிசுக்காக தி.மு.க.,விலிருந்து
விலக்கப்பட்டாரோ, அந்த வாரிசான ஸ்டாலினுக்கு இப்போது, காவடி துாக்குகிறார்.
காரணம், தன் மகன் துரை வைகோ, அரசியல் வியாபாரத்தில் செழிக்க!
கடந்த நான்கரை ஆண்டுகளாக, தி.மு.க.,வுடன் இணைந்து அதிகார சுகத்தை
ருசித்துக் கொண்டிருந்தவர் கண்களுக்கு, தமிழகம் போதைமிகு மாநிலமாக மாறி
வருவது தெரியவில்லை. இப்போது தேர்தல் நெருங்குவதால், தன் பார்வையை
மருத்துவரிடம் பரிசோதித்து விட்டு வந்துள்ளார் போலும்!
அதனால், போதைக்கு எதிராக நடை பயணம் புறப்பட்டு விட்டார்.
'பாம்பின் எலி வேட்டைக்கு, பூனை சாட்சி!'என்பது போல், தமிழகத்தை இந்த
நிலைக்கு ஆளாக்கிய மகானுபவரான தி.மு.க., முதல்வர் ஸ்டாலின், இந்த நடை
பயணத்தை துவக்கி வைத்துள்ளார்.
இந்த போதை ஒழிப்பு பயணத்திற்கு பெயர் சமத்துவ நடைபயணமாம்!
போதை ஒழிப்புடன், மத நல்லிணக்கம், சூற்றுச்சூழல் பாதுகாப்பு, ஜாதி - மத
பேதமற்ற சகோதரத்துவத்தை உருவாகவே, இந்த சமத்துவ நடைபயணம் மேற் கொள்கிறாராம்
வைகோ.
அப்படியென்றால், திராவிட மாடல் ஆட்சியில் மேற்படி அனைத்தும், தற்போது வரை சரியாக இல்லை என்று தானே அர்த்தம்?
'தி.மு.க., ஆட்சியில் மக்கள் மத நல்லிணக்கத்துடனும், ஜாதி - மத பேதமற்று
வாழ்கின்றனர். நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடுவதால், மக்கள் மகிழ்ச்சியில்
குதுாகலிக்கின்றனர்' என்று கூறி, தி.மு.க., ஆட்சிக்கு பெருமை சேர்க்கும்
வகையில், 'திராவிட மாடல் வெற்றி நடைபயணம்' என்று பெயர் சூட்டி
இருந்தாலாவது, தி.மு.க., முதல்வர் மகிழ்ந்து, இரண்டு சீட் கூடுதலாக
தந்திருப்பார்.
அதைவிடுத்து, ஆளும் அரசின் ஆட்சித் திறனை கண்டிப்பது போல், இப்படி போதை ஒழிப்பு நடைபயணம் போனால் எப்படி கூடுதல் சீட் பெறுவது?
அதிருப்தி ஓட்டாக மாறுமா?
என்.ஏ.நாகசுந்தரம் , குஞ்சன் விளை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆட்சியை பிடித்து, அதிகாரம் செலுத்திவிட வேண்டும் என்று வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதியாக கொடுத்து, இன்று விழிபிதுங்கி நிற்கிறார், திராவிட மாடல் முதல்வர்!
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கமான, 'ஜாக்டோ - ஜியோ' வேலை நிறுத்தம் செய்யப் போகிறது என்றதும், அவர்களை பகைத்தால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாதே என்று எண்ணி, அவர்களின் ஓய்வூதிய கோரிக்கை விஷயத்தில் சமரசம் செய்துள்ளார், ஸ்டாலின்.
அதேநேரம், துப்புரவு பணியாளர்கள், சம வேலைக்கு சம ஊதியம் கேட்கும் இடைநிலை ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர் என்று பிற துறையினரை எப்படி சமரசம் செய்யப் போகிறார்?
அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை என்று கூறி, பின், 'தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டும்' என்று, 'பல்டி' அடித்து, இப்போது ஓட்டுக்காக அதிலும் கொஞ்சம் தளர்வு செய்துள்ளார். ஆனாலும், உரிமைத் தொகை கிடைக்காத மகளிர் உக்கிரத்தில் இருப்பரே... அவர்களை எப்படி திருப்திபடுத்தப் போகிறார்?
'வங்கிகளில் தைரியமாக நகைகளை அடமானம் வையுங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், கடனை தள்ளுபடி செய்து, நகைகளை மீட்டுக் கொடுப்போம்' என்ற வாக்குறுதி பல்லிளித்து போய் விட்டதே... அவர்கள் ஓட்டு வேண்டாமா தி.மு.க., விற்கு?
'மாதாமாதம் மின் கணக்கீடு முறையை அமல்படுத்துவோம்...' என்று கூறி ஆட்சிக்கு வந்த ஸ்டாலின், பல மடங்கு மின் கட்டணத்தை உயர்த்தி, பல குடும்பங்களின் பட்ஜெட்டில் சூடு வைத்துள்ளார்.
இதுமட்டுமா... 'மாணவ - மாணவியரின் கல்விகடன் தள்ளுபடி' என்ற பேச்சு காற்றோடு போச்சு; கேஸ் மானியம், புஸ்சாகி போனது.
இவை எல்லாவற்றிற்கும் மேல், முதல் கையெழுத்து மதுவிலக்கு என்று சொல்லி, இன்று ஊரில் உள்ள ஆண்களை எல்லாம் மதுவினால் கை நடுங்க வைத்தது தான் மிச்சமாகியுள்ளது.
இவர்களை சமரசம் செய்து எப்படி ஓட்டு வாங்கப் போகிறார் தி.மு.க., முதல்வர்?
மெரினா என்ன சுடுகாடா?
என்.ராமதுரை, தேனியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கிராமத்தில் சுடுகாடு இருக்கும் இடத்தில் தான் பிணத்தை எரிப்பர்; வேறு எந்த இடத்திலும் பிணத்தை எரிக்க மாட்டார்கள்.
'அதுபோல, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் இடத்தில் தான் தீபம் ஏற்ற வேண்டும். புதிய இடத்தில் தீபம் ஏற்றுவதை அனுமதிக்க முடியாது' என்று கூறியுள்ளார், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி.
அப்படியெனில், சுடுகாடு இருக்கும் இடத்தில் தானே பிணத்தை புதைக்க வேண்டும்? அண்ணாதுரையின் பிணத்தை எதற்கு கடற் கரையில் புதைத்தனர்?
எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா, கருணாநிதியின் பிணங்களை புதைத்து, உலகப் புகழ் பெற்ற கடற்கரையை, சுடுகாடு ஆக்கியது ஏன்?
மூப்பனாரின் உடலை காங்கிரஸ் மைதானத்தின் ஒரு பகுதியில் புதைத்தது போன்று, அண்ணாதுரை மற்றும் கருணாநிதியின் உடல்களை, அண்ணா அறிவாலய வளாகத்துக்குள் புதைத்து, சமாதி கட்டி இருக்க வேண்டியது தானே!
நரிக்கு நாட்டாமை கொடுத்தால், கிடைக்கு இரண்டு ஆடுகள் கேட்குமாம்!
அதுபோல, சுயநலவாதிகளுக்கு ஓட்டளித்து வெற்றியடைய வைத்தால், சுடுகாட்டில் விளக்கேற்ற சொல்வர்; கோவில் அருகில் பிணத்தை புதைப்பதை மதநல்லிணக்கம் என்று தானே சொல்வர்!

