PUBLISHED ON : ஆக 28, 2025 12:00 AM

'இவரிடம் நாமும் கற்றுக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது...' என, மத்திய பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவை பார்த்து ஆச்சரியப்படுகின்றனர், சக அமைச்சர்கள்.
பார்லிமென்ட் கூட்டத் தொடர் துவங்கி விட்டாலே, அந்த துறையை கவனிக்கும் கிரண் ரிஜிஜு மிகவும், 'பிசி'யாகி விடுவார். எதிர்க்கட்சிகளை சமாளிப்பது, சபை நடவடிக்கைகள் எந்தவித இடையூறும் இல்லாமல் நடப்பதற்கு உதவி செய்வது என, அவருக்கு ஆயிரத்தெட்டு வேலைகள் இருக்கும்.
இதனால், அவருக்கு கடும் மன உளைச்சலும் ஏற்படும். இந்த பிரச்னை யில் இருந்து விடுபடுவதற்காக, ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டார், ரிஜிஜு.
சமீபத்தில், பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் முடிந்ததும், இரவில் வீட்டுக்கு வந்த அவர், அருகில் உள்ள மைதானத்துக்கு சென்று தன்னந்தனியாக கால்பந்து விளையாடினார். நீண்ட நேரம் விளையாடிய பின், வீட்டுக்கு திரும்பிய அவர், அந்த களைப்பிலேயே படுத்து உறங்கி விட்டார்.
அடுத்த நாள் இது குறித்த அனுபவத்தை, தன் நண்பர்களுடன் பகிர்ந்த கிரண் ரிஜிஜு, 'மன அழுத்தம் குறைந்து, புதிதாக பிறந்தது போல் உணர்கிறேன். இனி, தினமும் சில நிமிடங்களாவது கால்பந்து விளையாட முடிவு செய்துள்ளேன்...' என்றார்.
கிரண் ரிஜிஜுவின் நண்பர்களோ, 'அமைச்சர் பதவியை மறந்துவிட்டு, முழுநேர கால்பந்து வீரராக மாறாமல் இருந்தால் சரி தான்...' என, கிண்டல் அடித்தனர்.