PUBLISHED ON : ஜூன் 08, 2025 12:00 AM

'ஒருமுறை பதவி சுகத்தை அனுபவித்து விட்டால், அதன்பின், அதை விட்டுக்கொடுக்க மனதே வராதே...' என, பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவருமான நிதிஷ் குமார் பற்றி கூறுகின்றனர், சக அரசியல்வாதிகள்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. நிதிஷ் குமார், 20 ஆண்டுகளுக்கு மேலாக பீஹார் முதல்வர் பதவியை வகித்துள்ளார்.
விரைவில் இங்கு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. 'நிதிஷ் குமாருக்கு உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்பதால், முதல்வர் பதவியிலிருந்து அவர் விலக வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் ஏற்கனவே போர்க்கொடி துாக்கி வருகின்றன.
கூட்டணி கட்சியான பா.ஜ.,வின் தலைவர்களும், 'எத்தனை முறைதான், முதல்வர் பதவியை நிதிஷ் குமாருக்கே விட்டுக் கொடுப்பது... இந்த முறை நம் கட்சியைச் சேர்ந்தவர் தான் முதல்வராக வேண்டும்...' என, கட்சி தலைமையிடம் கூறி வருகின்றனர். ஆனால், கட்சி மேலிடத் தலைவர்களோ, நிதிஷ் குமார் விஷயத்தில் மென்மையான போக்கை கடைப்பிடிக்கின்றனர்.
'மஹாராஷ்டிராவிலும், தேர்தல் நடப்பதற்கு முன், சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டேயிடம், இப்படித்தான் முதல்வர் பதவி தருவதாக, பா.ஜ., தலைவர்கள் வாக்குறுதி அளித்தனர். ஆனால், தேர்தலுக்குப் பின் தங்கள் கட்சியைச் சேர்ந்த, தேவேந்திர பட்னவிசை முதல்வராக்கவில்லையா... அதேபோல் நிதிஷ் குமாருக்கும், 'அல்வா' கொடுப்பர்...' என கிண்டலடிக்கின்றனர், பீஹார் அரசியல்வாதிகள்.