PUBLISHED ON : ஆக 13, 2025 12:00 AM

'தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே இவ்வளவு பஞ்சாயத்து... தேதி அறிவித்த பின், என்னென்ன பஞ்சாயத்து நடக்கப் போகிறதோ...' என, பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் பற்றி கூறுகின்றனர், பீஹார் மாநில அரசியல்வாதிகள்.
இம்மாநிலத்தில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமை யிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின், ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றொரு கூட்டணியாகவும் களத்தில் இறங்கிஉள்ளன.
பிரபல தேர்தல் வியூக நி புணர் பிரசாந்த் கிஷோரும், ஜன் சுராஜ் என்ற கட்சியை துவக்கி, தேர்தல் களத்தில் குதித்துள்ளார். முதல்வராக வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அவரது உடல்நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை. சமீபத்தில் போஜ்புரி மாவட்டத்தில் பேரணி சென்ற பிரசாந்த் கிஷோருக்கு காலில் காயம் ஏற்பட்டது; தொடர்ந்து, பேரணியில் பங்கேற்க முடியாமல் வீட்டுக்கு திரும்பினார்.
அதன்பின், ஒரு பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற போது, வெயில் காரணமாக மயக்கமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; அந்த கூட்டமும் ரத்து செய்யப்பட்டது.
'அரசியல்வாதியாக இருப்பது சாதரண விஷயமல்ல... தேர்தல் வந்தால், வெயில், மழை என எதையும் பாராமல், பம்பரமாக சுழல வேண்டும்; பிரசாந்த் கிஷோர் இதற்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்...' என்கின்றனர், பீஹார் அரசியல்வாதிகள்.