PUBLISHED ON : பிப் 23, 2026 01:21 AM

'மூத்த தலைவர் என்ற அடிப்படையில் மரியாதை கொடுத்தால், அதை காப்பாற்றத் தெரியவில்லையே...' என, முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் பற்றி எரிச்சலுடன் கூறுகின்றனர், காங்கிரஸ் நிர்வாகிகள்.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, அவரது அரசில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக பதவி வகித்தவர், மணிசங்கர் அய்யர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் இவரும் ஒருவர். ஆனால், இவருக்கு வாய் கொஞ்சம் நீளம்.
கடந்த, 2014 லோக்சபா தேர்தலுக்கு, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். அப்போது, 'ரயில்வே ஸ்டேஷனில் டீ விற்றவர்கள் எல்லாம், நாட்டின் பிரதமராக முடியாது...' என, மணிசங்கர் அய்யர் விமர்சித்தார்; அவரது இந்த பேச்சு, அந்த தேர்தலில் மோடிக்கு சாதகமாக மாறியது.
இதற்கு பின், பலமுறை இதுபோன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசியதால், காங்கிரசில் இருந்து மணிசங்கர் ஓரங்கட்டப்பட்டுள்ளார். இந்நிலையில், சமீபகாலமாக மீண்டும் ஊடக வெளிச்சத்துக்கு வந்துள்ளார் மணிசங்கர்.
'காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு, 'இண்டி' கூட்டணியை வழிநடத்தும் அளவுக்கு திறமையில்லை' என, சமீபத்தில் விமர்சித்தார்.
இதனால் கடுப்பான காங்கிரஸ் நிர்வாகிகள், 'மணிசங்கர் அய்யர், எங்கள் கட்சியில் அங்கம் வகிக்கவில்லை; அவருக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரை போன்ற வாடகை குரல்களுக்கு எங்கள் கட்சியில் இடமில்லை...' என, காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.

