PUBLISHED ON : ஏப் 01, 2026 03:03 AM

'குற்றச்சாட்டு கூறினால், இல்லை என்று மறுக்கலாம் அல்லது குற்றச்சாட்டு கூறியவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரலாம்; அதை விடுத்து ஏன் கொந்தளிக்கிறார்...' என, காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபாலை பார்த்து கிண்டல் அடிக்கின்றனர், கேரளாவில் உள்ள பிற கட்சியினர்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது; இங்கு, வரும் 9ல் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபாலின் சொந்த மாநிலம், கேரளா. எனவே, இங்கு வெற்றி பெறுவதை கவுரவ பிரச்னையாக கருதி, அங்கேயே முகாமிட்டு, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2024ல் ஹரியானாவில் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட, 'சீட்' வாங்கி தருவதாக கூறி, தன்னிடம், 7 கோடி ரூபாய் பெற்று, வேணுகோபால் ஏமாற்றி விட்டதாக, அம்மாநிலத்தைச் சேர்ந்த குமார் என்ற காங்கிரஸ் பிரமுகர், சமீபத்தில் டில்லி போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, 'காசுக்காக கட்சியை விற்பனை செய்யும் அளவுக்கு, நான் தரம் தாழ்ந்தவன் அல்ல. கேரள சட்டசபை தேர்தலில், என்னை வேலை செய்ய விடாமல் முடக்குவதற்காக, பா.ஜ., மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களின் துாண்டுதலின் பேரில், இப்பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது...' என, ஆவேசத்துடன் கூறியுள்ளார், வேணுகோபால்.
இதை பார்த்து, 'தப்பு செய்யாதவர் ஏன் இப்படி கோபப்படணும்...' என, பிற கட்சியினர் கேட்கின்றனர்.
