PUBLISHED ON : ஜூலை 01, 2026 12:34 AM

தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா பேட்டி:
பொதுவாக ஒரு ஆட்சி முடிந்து புதிய ஆட்சி வரும்போது, 'ரெய்டு' நடப்பது வழக்கம்தான்; இது ஒன்றும் புதிது கிடையாது. புதிய ஆட்சியில் பொறுப்பேற்ற எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் புதியவர்கள். அதனால்தான் அவர்கள் ஆறுமாத காலம் அவகாசம் கேட்கின்றனர். அவர்கள் ஆட்சியில் அமர்ந்து 50 நாட்கள்தான் ஆகின்றன. ஆகவே, அவர்களின் ஆட்சியை பொறுத்திருந்து பார்ப்போம். அவர்கள் சொன்னதற்கு மாறாக நடந்தால், தே.மு.தி.க., அதை எதிர்க்கும்.
திடீர்னு த.வெ.க., அரசுக்கு ஆதரவான நிலையை எடுக்கிறாங்களே... வைகோ வழியில் செல்ல தயாராகுறாங்களோ?
தி.மு.க., செய்தி தொடர்புக்குழு துணை தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை:
கல்விக்கூடத்தில், 'கைபடாத சி.டி.,' பாடலுக்கு குத்தாட்டம் போட்டவர், கல்வி அமைச்சர். மக்கள் திரண்டிருந்த அரங்கத்தில், மாத்திரையை பொடி செய்த மாமனிதர், மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர். புகை பிடிக்கும் படத்தை பச்சை குத்தி கொண்டவர், மகளிர் மேம்பாட்டு துறை அமைச்சர். தமிழ் பேச தெரியாத தயாரிப்பாளர், தமிழகத்தின் டில்லி தொடர்பாளர். சபாஷ்... உங்கள் நியமனங்களே, நிர்வாக திறமைக்கு சாட்சி என்றால், உங்கள் விரலில் இருக்கும் பச்சை மை பேனா, எஞ்சிய காலத்தில் இன்னும் என்னென்ன கெடு'மை' ஆகுமோ?
தி.மு.க., ஆட்சியில், 'மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய்; வீடு கட்ட சதுர அடிக்கு 40 ரூபாய், தனியார் பள்ளிகள் அங்கீகாரம் புதுப்பிக்க 25 லட்சம் ரூபாய்'னு லஞ்சத்துக்கு கட்டண நிர்ணயம் பண்ணிய கதை எல்லாம் இவர் கவனத்துக்கு வரலையோ?
அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை:
'பத்த வெச்சு புகை இழுத்தா பவர் கிக்' என பாடி, இளைஞர்களிடம் போதை பழக்கத்தை ஊக்குவித்த பாவத்திற்கு, முதல்வர் விஜய், 3 கி.மீ., இல்லை, 3,000 கி.மீ., ஓடினாலும் பாவம் தீராது. பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் விதமாக உள்ளது அவரது செயல்.
சினிமாவில் பாடி நடிப்பதை எல்லாம் நிஜம் என்று நம்பிய தலைமுறைகள் இப்ப இல்லை தெரியுமா?
இந்திய கம்யூ., மாநில செயலர் வீரபாண்டியன் பேட்டி:
எங்கள் கட்சியை பொறுத்தவரை, தி.மு.க., கூட்டணியில் நாங்கள் இருந்த போது, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் எங்களை எந்த நிர்பந்தமும் செய்யவில்லை; எந்த அழுத்தங்களையும் தரவில்லை.
உங்களுக்கு யாரும் அழுத்தம் தர முடியாது... ஆனா, கூட்டணியில் இருந்தால், அவங்க எந்த தப்பு செய்தாலும், கூட்டணி தர்மத்தின்படி கண்டுக்க மாட்டீங்க, அவ்வளவு தான்!
