PUBLISHED ON : ஜூலை 02, 2026 12:53 AM

பா.ஜ., தமிழக தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
தன் கட்சி எம்.எல்.ஏ.,க்களை ராஜினாமா செய்ய சொன்ன ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவுக்கு, உண்மையில் துணிவிருந்தால், நேர்மையிருந்தால், திராணியிருந்தால், தன் மகன் துரை வைகோவையும் எம்.பி., பதவியில் இருந்து ராஜினாமா செய்ய சொல்ல வேண்டும்.
நீங்க கேட்ட இதே கேள்வியை தான், ராஜினாமா செய்ய மறுத்த ம.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் இருவரும் கேட்டு, வைகோவின் ரத்த அழுத்தத்தை எகிற வச்சுட்டு போயிட்டாங்க!
மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., பேட்டி:
தேர்தலில் தனி சின்னத்தில் நிற்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். ஆனால், எங்களுக்கு தனி சின்னம் இல்லை. சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டால் வெற்றியை பாதிக்கும். எனவே, நிர்வாகக் குழு முடிவின்படி தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டோம். தி.மு.க., சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என, எங்களுக்கு எந்த நிர்ப்பந்தமும் வரவில்லை.
தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டால், தேர்தல் செலவுகளை அவங்களே ஏத்துக்குவாங்க என்ற, 'டீலிங்'கை வெளியில சொல்ல மாட்டேங்கிறாரே!
தி.மு.க., முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு:
தேர்தல் தோல்வி ஒரு சறுக்கல் தான். த.வெ.க.,வுக்கு ஓட்டு போட்டவர்கள், தங்கள் தவறை உணர துவங்கிவிட்டனர். நாம் மீண்டும் வருவோம். எந்த அச்சமும், ஐயமும் தேவை இல்லை. வளரும் இளம் சமுதாயத்தினர், நம் கட்சியில் அடுத்த கவுன்சிலர்களாகவும், ஒன்றிய செயலர்களாகவும் இருப்பர். தி.மு.க.,வை வழி நடத்தக்கூடிய அடுத்த தலை வர்கள் இளைஞர்கள் தான்.
அப்படி என்றால், இனி தேர்தலில் போட்டியிடாமல், இப்ப இருக்கும் மாவட்டச் செயலர் பதவியை கூட இளைய சமுதாயத்துக்கு விட்டுக் கொடுக்க தயாராகிட்டீங்களோ?
த.வெ.க., செய்தி தொடர்பாளர் ரத்தன் பண்டிட் பேட்டி:
திராவிடர்கள் என்று சொல்பவர்கள், 'நாங்கள் திராவிடர்கள்; எங்களுக்கு மொழி, ஜாதி, மதம் தடையல்ல' என்கின்றனர். அப்படியிருக்கும் போது, கர்நாடகாவை சேர்ந்த ஒருவரால் ஏன் தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது? தற்போது, டில்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு உள்ள வெங்கட நாராயணாவுக்கு தென் மாநி லங்களின் ஒட்டுமொத்த வரலா றும் தெரியும். அவருடைய செயல்பாட்டை பார்த்த பின் யாரும் கேள்வி எழுப்பலாம்.
அது இருக்கட்டும்... நம்மை சுற்றியுள்ள தென் மாநிலங்கள்ல ஒன்றிலாவது, தமிழர் ஒருத்தருக்கு டில்லி சிறப்பு பிரதிநிதி பதவி கொடுத்திருக்காங்களா?
