PUBLISHED ON : நவ 23, 2026 12:00 AM

‘யாரிடம், எப்படி வேலை வாங்க வேண்டும் என்பதை நன்றாக தெரிந்து வைத்துள்ளார்...’ என, ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங்கை பாராட்டுகின்றனர், டில்லியில் உள்ள சக அரசியல்வாதிகள்.
நம் நாட்டு விமானப் படையின் புதிய தளபதியாக, அசுதோஷ் தீட்ஷித் சமீபத்தில் பதவியேற்றார். அவர் பொறுப்புக்கு வந்ததும், முதல் முறையாக மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள விமானப் படை தளத்தில், தீபாவளியை ஒட்டி ஏற்பாடு செய்திருந்த விழாவில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.
இதில் பேசிய ராஜ்நாத் சிங், ‘நம் நாட்டின் விமானப் படை தளபதியாக பொறுப்பேற்றுள்ள அசுதோஷ், பார்ப்பதற்கு அமைதியான குணம் உடையவராக காணப்படுகிறார். அதை பார்த்து, நம் எதிரி நாடுகள், அவரை தவறாக எடை போட வேண்டாம்.
‘கடவுள் சிவபெருமான் கூட, அமைதியானவராகவும், எளிமையாகவும் தான் காட்சியளிப்பார்; ஆனால், தேவைப்படும் நேரத்தில் ருத்ர அவதாரம் எடுத்து, எதிரிகளை ஒழிப்பார். நம் தளபதி அசுதோஷும் அப்படிப்பட்டவர் தான். எதிரிகள் சீண்டினால், ருத்ர அவதாரம் எடுத்து, அவர்களை ஒழிப்பார். சிவபெருமானுக்கு அசுதோஷ் என்ற பெயர் கூட உண்டு...’ என்றார்.
ராஜ்நாத் சிங்கின் இந்த உவமையை கேட்டதும், அங்கிருந்தவர்கள், கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். ‘ராஜ்நாத் சிங் மூத்த அரசியல் தலைவர் அல்லவா; அதனால் தான், எந்த இடத்தில் எதை பற்றி பேசினால் பாராட்டு கிடைக்கும் என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்...’ என்கின்றனர், சக அரசியல்வாதிகள்.
