PUBLISHED ON : நவ 22, 2026 12:00 AM

‘எதில் தான் அரசியல் செய்வது என்ற விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது...’ என, காட்டமாக பேசுகின்றனர், தெலுங்கானா மாநில மக்கள்.
தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது.
பிரதான எதிர்க்கட்சியான பாரத் ராஷ்ட்ர சமிதியின் செயல் தலைவர் கே.டி.ராமாராவ், எப்போதும், ‘பளபள’வென, ‘ஷேவ்’ செய்த முகத்துடன் தான் காணப்படுவார். ஆனால், சமீபகாலமாக குறுந்தாடியுடன் வலம் வருகிறார்.
முதல்வர் ரேவந்த் ரெட்டி தாடி வைத்திருப்பதை பார்த்து, அதேபோல் ராமாராவும் தாடி வைத்திருப்பதாக, காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். ‘நரி, தன் முகத்தில் கோடுகளை வரைந்து கொள்வதால் மட்டும் புலியாகி விட முடியாது...’ என, ரேவந்த் ரெட்டியும், தன் பங்கிற்கு கிண்டலடித்தார்.
ராமாராவோ, ‘என் முகத்தை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது நான் தான். அடுத்தவர்களை பார்த்து, ‘காப்பி’ அடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை...’ என, ஆவேசமாக தெரிவித்தார்.
‘ராமாராவின் தந்தையும், முன்னாள் முதல்வருமான சந்திரசேகர ராவ், ஜோதிடம், வாஸ்து போன்றவற்றில் நம்பிக்கை உள்ளவர். எனவே, தாடி வளர்த்தால் ராமாராவ் முதல்வராகி விடலாம் என யாராவது ஒரு ஜோதிடர், ஆலோசனை கூறியிருக்கலாம். அதனால் அவர் தாடி வளர்த்திருக்கலாம்...’ என்கின்றனர், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியினர்.
ராமாராவோ, ‘தாடி வளர்த்ததை சர்வதேச பிரச்னை போல் பேசுகின்றனரே...’ என புலம்புகிறார்.
