PUBLISHED ON : செப் 10, 2025 12:00 AM

'தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி விட்டு, துாக்கி எறிவது தான் இவர்களுக்கு வேலையாக போய் விட்டது...' என, உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியினரை பற்றி எரிச்சலுடன் பேசுகிறார், அந்த கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கிஷோரி லால் ஷர்மா.
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அமேதி லோக்சபா தொகுதியில், 2019ல் நடந்த தேர்தலில், காங்கிரசின் ராகுலை தோற்கடித்தார், பா.ஜ.,வின் ஸ்மிருதி இரானி.
இதனால், 2024ல் நடந்த தேர்தலில், அமேதியில் போட்டியிடுவதை ராகுல் தவிர்த்தார். இதையடுத்து, ஸ்மிருதி இரானியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில், ராகுலுக்கு மிகவும் விசுவா சமான, கிஷோரி லால் ஷர்மா களம் இறங்கினார்.
இந்த தேர்தலில் கிஷோரி லால் ஷர்மா வெற்றி பெற்று, ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்; அவரை, காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தலைமேல் துாக்கி வைத்து கொண்டாடினர்.
இந்நிலையில், லக்னோவில் சமீபத்தில் காங்கிரஸ் சார்பில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க, கிஷோரி லால் ஷர்மா சற்று தாமதமாக வந்தார். அங்கிருந்த பாதுகாவலர்கள், அவரை மேடைக்கு செல்லவிடாமல் தடுத்து விட்டனர்; இதனால் கோபமடைந்த ஷர்மா, நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறப்பட்டு சென்றார்.
'ராகுலுக்கு மிகவும் வேண்டப்பட்ட என்னையே இவ்வளவு அவமதிக்கின்றனரே... மற்றவர்களின் நிலையை நினைத்துப் பாருங்கள்...' என புலம்புகிறார், கிஷோரி லால் ஷர்மா.