/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கட்சி நிர்வாகிகளுக்கு, 'டோஸ்' விட்ட அமைச்சர்!
/
கட்சி நிர்வாகிகளுக்கு, 'டோஸ்' விட்ட அமைச்சர்!
PUBLISHED ON : மார் 02, 2026 01:38 AM

''மே யராக துடிக்கறார் ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.
''யாருவே அது...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சியா இருந்தப்ப, தலைவர் பதவிக்கு தி.மு.க., நகர செயலர் குணசேகரன் தான் முன்னிலையில் இருந்தார்... ஆனா, ஏற்கனவே நகராட்சி தலைவரா இருந்த முத்துதுரைக்கு தலைவர் பதவியும், குணசேகரனுக்கு துணை தலைவர் பதவியும் குடுத்தா ஓய்...
''கடந்த, 2024ல் நகராட்சியை மாநகராட்சியா தரம் உயர்த்திட்டதால, ரெண்டு பேருமே மேயர், துணை மேயர்களாகிட்டா... 'மேயரானதும் முத்துதுரை யாரையும் மதிக்கறது இல்ல'ன்னு கூட்டணி கட்சியினரே புகார் சொன்னா ஓய்...
''குணசேகரன் தரப்பு கவுன்சிலர்கள் எல்லாம் சேர்ந்து, மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முயற்சி பண்ணா... ஆனா, தலைமை சமாதானம் பண்ணினதால அமைதியாகிட்டா ஓய்...
''இப்ப, உடம்பு சரியில்லாம மேயர் ஓய்வுல இருக்கார்... இதனால, எல்லா நிகழ்ச்சிகள்லயும் துணை மேயர் தான் கலந்துக்கறார்... இதனால, தன்னை பொறுப்பு மேயரா அறிவிக்கணும்னு தலைமையிடம் கேட்டுட்டு இருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''மதுராந்தகம் தனி தொகுதிக்கு வந்த சோதனையைக் கேளுங்க பா...'' என்றபடி, அடுத்த தகவலைத் தொடர்ந்தார் அன்வர்பாய்.
''இப்ப, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த மரகதம் குமரவேல் தானே வே, எம்.எல்.ஏ.,வா இருக்காங்க...'' எனக் கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.
''ஆமாம்... அவங்க தான் இந்த தொகுதி எம்.எல்.ஏ.,வா இருக்காங்க... சென்னைக்கு பக்கத்துல செங்கல்பட்டுல இந்த தொகுதி இருக்குது...
''வர்ற தேர்தல்ல, தானே போட்டியிடுறதா, தலைமையிடம் சொல்லிட்டாங்க... பணத்தையும் தானே செலவு செஞ்சிக்கிறதாவும் சொல்லிட்டாங்க... ஆனா, இங்கே கட்சியினர் நிறைய பேர் இருக்கிறதால, அவங்களுக்கெல்லாம் முக்கியத்துவம் வேணும்ன்னு இப்ப நினைக்கிறாங்க பா... மரகதம் குமரவேலோட கோரிக்கையைக் கேக்கலேன்னா, இம்முறை அ.தி.மு.க., கிட்டேர்ந்து இந்த தொகுதி கைநழுவி போயிடும் போலிருக்கு பா...'' எனக் கூறி முடித்தார் அன்வர்பாய்.
''கட்சி நிர்வாகிகளுக்கு, 'டோஸ்' விட்டிருக்காரு வே...'' என்றார் அண்ணாச்சி.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அரசு கலை கல்லுாரி இருக்கு... இங்க, 50 லட்சம் ரூபாய் செலவுல, முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு, சமீபத்தில் சிலை திறந்திருக்காவ வே...
''இந்த சிலைக்கு மாலை போட்டு மரியாதை பண்ண, மாவட்ட அமைச்சர் சமீபத்தில் வந்தாரு... முதல்ல, ஓய்வு எடுக்கிறதுக்காக கல்லுாரி பக்கத்துல இருந்த நட்சத்திர ஹோட்டலுக்கு வந்தாரு வே...
''அங்க, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் யாரும் இல்ல... அமைச்சர் அங்க வந்திருக்கிற தகவல் கிடைச்சு, 20க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் அரக்க பறக்க ஓடி வந்திருக்காவ வே...
''அவங்களை பார்த்து டென்ஷன் ஆன அமைச்சர், 'என்னை வரவேற்க யாரும் வர மாட்டீங்க... இதே, எம்.பி., ஜெகத்ரட்சகன், மாவட்ட பொறுப்பு அமைச்சர் காந்தி வந்தா, அவங்க வர்றதுக்கு முன்னாடியே, மணிக்கணக்கில் காத்து கிடப்பீங்க... என்னை யாருமே மதிக்கிறது இல்ல'ன்னு பொரிஞ்சு தள்ளிட்டு, அறைக்குள்ள போய் கதவை மூடிக்கிட்டாரு...
''அரை மணி நேரம் கழிச்சு, கோபம் குறைஞ்சு, கல்லுாரிக்கு போய், சிலைக்கு மரியாதை பண்ணியிருக்காரு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''நாசர், ஊருக்கு போயிட்டு எப்ப வந்தீங்க...'' என, நண்பரிடம் அந்தோணிசாமி நலம் விசாரிக்க, மற்றவர்கள் கிளம்பினர்.

