தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ காங்., கட்சிக்கு தேர்தல் பணி செய்ய தி.மு.க.,வினர் மறுப்பு!

 காங்., கட்சிக்கு தேர்தல் பணி செய்ய தி.மு.க.,வினர் மறுப்பு!

 காங்., கட்சிக்கு தேர்தல் பணி செய்ய தி.மு.க.,வினர் மறுப்பு!


PUBLISHED ON : மார் 03, 2026 01:24 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 03, 2026 01:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெ ஞ்சில் அமர்ந்த கையுடன், ''கூட்டணி கட்சிக்கு தள்ளிவிட பார்க்கிறாருங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் தொகுதிக்கு, பா.ஜ., பிரமுகர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் முயற்சி பண்றாரு... அ.தி.மு.க.,வில் இருந்து பா.ஜ.,வுக்கு வந்த இவர், அ.தி.மு.க., கூட்டணி தயவுல, திருச்செந்துார்ல சுலபமா ஜெயிச்சிடலாம்னு நினைக்கிறாருங்க...

''தொகுதியிலயே சுத்தி வர்ற இவர், பல இடங்கள்ல விளக்கு பூஜை நடத்தி, பெண்களுக்கு நிறைய பரிசுகளை குடுத்திருக்காரு... அதே நேரம், இந்த மாவட்டத்தில் இருக்கிற ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கும் பா.ஜ., குறி வச்சிருக்குதுங்க...

''இந்த தொகுதி, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் போட்டியிடும் தொகுதி... இதனால, திருச்செந்துாரை பா.ஜ.,வுக்கு குடுத்துட்டா, ஸ்ரீவைகுண்டம் பக்கம் வரமாட்டாங்கன்னு நினைக்கிற அவர், திருச்செந்துாரை பா.ஜ.,வுக்கு தள்ளிவிட காய் நகர்த்திட்டு இருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''தொழிற்சங்கவாதி மாதிரி செயல்படுதாரு வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.

''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.

''பட்டுக்கு பிரசித்தி பெற்ற மாவட்ட உயர் அதிகாரிக்கு, நேர்முக உதவியாளரா ஒருத்தர் இருக்காரு... இளநிலை உதவியாளரா பணியை துவங்கிய இவர், வட்டார வளர்ச்சி அலுவலராகும் வரை, இதே மாவட்டத்துல தான் இருந்தாரு வே...

''ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, உதவி இயக்குநர் பதவி உயர்வுடன், பக்கத்து மாவட்டத்துக்கு போனவர், ஒரே வருஷத்துல மறுபடியும் பட்டு மாவட்டத்துக்கு வந்துட்டாரு... இப்ப, தேர்தலை முன்னிட்டு, அதிகாரிகளை மாத்துதாங்கல்லா வே...

''இதுல, ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க நிர்வாகிகளா இருக்கும் பி.டி.ஓ.,க்கள் சிலருக்கு, அவங்க கேட்ட இடங்களுக்கு இடமாறுதல் குடுத்திருக்காரு...

''அந்த உத்தரவுகளை கூட, 'இ - மெயில்'ல அனுப்பாம, பி.டி.ஓ., அலுவலக ஊழியர்களை கூப்பிட்டு, அவங்க கையில ரகசியமா குடுத்து அனுப்பியிருக்காரு... 'இவர் உதவியாளரா அல்லது சங்க நிர்வாகியா'ன்னு ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் புலம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''ராஜ்குமார், இப்படி உட்காரும்...'' என்ற குப்பண்ணாவே, ''ஒரு தொகுதி கூட தரக்கூடாதுன்னு சொல்லிட்டா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறினார்.

''யாருக்கு வே...'' என கேட்டார், அண்ணாச்சி.

''கடந்த 2024 லோக்சபா தேர்தல்ல, விருதுநகர் தொகுதியில், காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர், 4,000 சொச்சம் ஓட்டுகள் வித்தியாசத்துல தான் ஜெயிச்சார்... அவர் வெற்றிக்காக, மாவட்ட அமைச்சர்களான சாத்துார் ராமச்சந்திரனும், தங்கம் தென்னரசும் ரொம்பவே பாடுபட்டா ஓய்...

''இப்ப, அதே மாணிக்கம் தாகூர், தி.மு.க.,வுக்கு எதிரா பேசி, ஆட்சியில் பங்கு கேட்டு குடைச்சல் குடுக்கறதால, ரெண்டு அமைச்சர்களின் ஆதரவாளர்களும் வெறுத்து போயிருக்கா... இதனால, 'வர்ற சட்டசபை தேர்தல்ல நம்ம மாவட்டத்தில் காங்., கட்சிக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கக் கூடாது... அப்படி ஒதுக்குனா, அந்த கட்சி வேட்பாளருக்கு நாங்க தேர்தல் வேலை செய்ய மாட்டோம்'னு அமைச்சர்களிடம் திட்டவட்டமா சொல்லிட்டா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us