உலகக் கோப்பையில் அனைவரையும் கவர்ந்த குட்டிச் செல்லம்: கெய்ன்!
உலகக் கோப்பையில் அனைவரையும் கவர்ந்த குட்டிச் செல்லம்: கெய்ன்!
PUBLISHED ON : ஜூலை 21, 2026 04:41 PM

கடந்த ஒன்றரை மாதங்களாகக் கால்பந்து ரசிகர்களைக் கட்டிப்போட்டிருந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி நாளில், ஸ்பெயின் ஒரு கோல் அடித்து உலகக் கோப்பையைத் தன் வசமாக்கிக் கொண்டது. அந்த மகத்தான நாளின் நிறைவுப் பகுதியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்துகொண்டனர். ஆனால், அவர்கள் எல்லாரையும் பின்னுக்குத் தள்ளி, ஒரு குட்டிச் சிறுவன் ஒட்டுமொத்த உலக ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தான்.


தன் அண்ணனைப் போலவே சீருடையும் தொப்பியும் அணிந்து குடுகுடுவென ஓடிவந்தவன், வழியில் நின்றிருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு எல்லாம் சிரித்த முகத்தோடு கை கொடுத்தபடி வந்தான்.
அண்ணனை நெருங்கியதும் ஒரே தாவலில் அவரது இடுப்பில் ஏறி உட்கார்ந்து கொண்டு கட்டியணைத்து முத்த மழை பொழிந்தான். அதன்பிறகும் அண்ணனை விட்டு விலகாமல் அவரைச் சுற்றிச் சுற்றி வந்து விளையாடிக்கொண்டே இருந்தான்.
அவனைப் போலவே மேலும் சில குழந்தைகள் அங்கு வர, அவர்களுடன் சேர்ந்து கால்பந்தை உதைத்து விளையாட ஆரம்பித்தான். பரிசளிப்பு விழா தொடங்கவே, யமாலிடம் இருந்து கெய்னைச் சிரமப்பட்டுப் பிரித்து பார்வையாளர் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
இன்று பல கோடிகளுக்கு அதிபதியான நட்சத்திர வீரர் யமால், மிகவும் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர்தான். அவரது அப்பா பழைய இரும்புப் பொருட்களைச் சேகரித்து விற்பவர்; அம்மா துரித உணவகத்தில் பணியாற்றியவர். யமால் தனது 13 வயதிலேயே கால்பந்தாட்டத்தில் பிரகாசிக்கத் தொடங்கியதும், அவரது குடும்பத்தின் வறுமை நீங்கி மகிழ்ச்சி பொங்கத் தொடங்கியது.
யமாலுக்கு 16 வயது ஆனபோதுதான் அவரது தம்பி கெய்ன் பிறந்தான். இதனால் தம்பி மீது அசாத்திய பாசம் கொண்ட யமால், தான் எங்கு சென்றாலும் கெய்னையும் அழைத்துச் சென்றுவிடுவார். இதன் காரணமாக, கெய்னுக்குக் கூட்டம், ஊடக வெளிச்சம், ரசிகர்களின் ஆரவாரம் போன்றவை பழகிப்போனதால், அவனுக்குள் கூச்சமோ பயமோ சிறிதும் கிடையாது. அதனால்தான், ஒரு பத்து வயதுப் பையனைப் போல மைதானத்தில் எவ்வித அச்சமுமின்றி அவனால் சாதாரணமாக வலம் வர முடிந்தது.
லாம்மின் யமாலுக்கும் கெய்னுக்கும் இடையே 16 ஆண்டுகள் வயது வித்தியாசம் உள்ளது. 'என் தம்பி எனக்குத் தம்பி மட்டுமல்ல, என் மகனைப் போன்றவன்; அவனுக்கு ஒரு நல்ல குழந்தைப் பருவத்தைக் கொடுப்பதே என் மிகப்பெரிய சந்தோஷம்' என்று யமால் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
கெய்ன் இன்னும் முறையான பள்ளிப் படிப்பைத் தொடங்கவில்லை. தற்போது விளையாட்டுப் பருவம் என்பதால் தாயாரின் அரவணைப்பில் வளர்ந்து வரும் இந்தக் குட்டிச் செல்லம், விரைவில் தனது பள்ளிப் பயணத்தைத் தொடங்குவான்!
-எல்.முருகராஜ்
