PUBLISHED ON : நவ 09, 2026 12:00 AM

‘இந்த புதிய கூட்டணியை, திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி எப்படி ஜீரணிக்க போகிறார் என்று தெரியவில்லையே...’ என, மேற்கு வங்க மாநில மக்கள் கூறுகின்றனர்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில், மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் தோற்று, பா.ஜ., விடம் ஆட்சியை பறிகொடுத்தது.
இதையடுத்து, திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகிகள், வேறு கட்சிகளுக்கு ஓட்டம் பிடித்தனர். மம்தாவின் வலதுகரமாக இருந்த சுதீப் பந்தோபாத்யாய் தலைமையில், 20 எம்.பி.,க்கள், திரிணமுல் காங்கிரசில் இருந்து விலகி, தேசிய குடிமக்கள் கட்சி என்ற அதிகம் அறிமுகம் இல்லாத கட்சியில் ஐக்கியமாகினர். அப்போதே, ‘இது பா.ஜ., தலைவர்களின் வேலை தான்...’ என, மம்தா குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் விரைவில் நடக்கவுள்ள நகராட்சி தேர்தலில், பா.ஜ., வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்காக, முதல்வர் சுவேந்து அதிகாரியுடன், சுதீப் பந்தோபாத்யாய் சமீபத்தில் நீண்ட நேரம் பேச்சு நடத்தியதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
சுதீப் பந்தோபாத்யாயோ, ‘இது மரியாதை நிமித்தமான சந்திப்பு; கூட்டணிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை...’ என, மழுப்பலாக தெரிவித்தாலும், இதை நம்ப மம்தா கட்சியினர் தயாராக இல்லை.
