PUBLISHED ON : நவ 08, 2026 12:00 AM

‘இப்போதே வெற்றி குறித்து சிந்திக்க தொடங்கி விட்டாரே...’ என, பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபீன் குறித்து ஆச்சரியத்துடன் பேசுகின்றனர், ஜார்க்கண்ட் மாநில பா.ஜ.,வினர்.
ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில், அவரது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி – காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. பீஹாரில் இருந்து 2000வது ஆண்டில் பிரிக்கப்பட்டது தான் ஜார்க்கண்ட்.
இம்மாநிலத்தைச் சுற்றியுள்ள பீஹார், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், ஒடிசா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.,வே ஆளுங்கட்சியாக உள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் ஜார்க்கண்டிற்கு வந்த நிதின் நபீன், பா.ஜ., நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், ‘பீஹார், என் சொந்த மாநிலமாக இருந்தாலும், ஜார்க்கண்டிற்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஜார்க்கண்டின் ராஞ்சி நகரில் தான் பிறந்தேன்; ராஞ்சியில் தான் படித்தேன். இதனால், ஜார்க்கண்டில் பா.ஜ., ஆட்சியில் இல்லையே என்ற கவலை என்னை வாட்டுகிறது.
‘இன்னும் இரண்டரை ஆண்டுகளில் இங்கு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், நாம் ஆட்சியை பிடித்தாக வேண்டும். அதற்காக, இப்போதே பணியாற்ற வேண்டும். தேர்தல் நெருங்கும் நேரத்தில், நானே இங்கு முகாமிட்டு பிரசாரப் பணிகளை கண்காணிப்பேன்...’ என்றார்.
இதை கேட்ட ஜார்க்கண்ட் பா.ஜ.,வினர், ‘இங்கு ஆட்சியை பிடிக்கும் வரை நிதின் நபீன் துாங்க மாட்டார் போலிருக்கே’ என முணுமுணுக்கின்றனர்.
