PUBLISHED ON : ஜூலை 12, 2025 12:00 AM

'என்னவென்று தெரியவில்லை; கடந்த சில மாதங்களாகவே இவரது காட்டில் அடைமழை பெய்கிறது...' என, கர்நாடக முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா பற்றி வயிற்றெரிச்சலுடன் புலம்புகின்றனர், அவரது அரசியல் எதிரிகள்.
கர்நாடகாவில், சித்தராமையாவிடம் இருந்து முதல்வர் பதவியை கைப்பற்றுவதற்காக பல வகையிலும் முயற்சித்து வருகிறார், துணை முதல்வர் சிவகுமார். இதற்காக, பல அதிரடியான அரசியல் வியூகங்களை திரைமறைவில் மேற்கொண்டார்; ஆனால், எதுவுமே பலன் அளிக்கவில்லை.
இப்போது, கர்நாடக தொழில் துறையில் சித்தராமையா எடுத்த நடவடிக்கையும், அவருக்கு பாராட்டை பெற்று தந்துள்ளது.
கர்நாடக அரசால் தயாரிக்கப்படும் மைசூர் சாண்டல் சோப்பை விளம்பரப்படுத்துவதற்கான துாதராக, பிரபல நடிகையும், வட மாநிலத்தைச் சேர்ந்தவருமான தமன்னாவை, கர்நாடக தொழில் துறை நியமித்தது; இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
'நம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நடிகையை விளம்பரத் துாதராக நியமிக்காமல், வட மாநிலத்தைச் சேர்ந்தவரை நியமித்தது ஏன்?' என, எதிர்க்கட்சியினரும் கேள்வி எழுப்பினர். இந்த எதிர்ப்பின் பின்னணியில், சிவகுமார் இருப்பதாகவும் பேச்சு அடிபட்டது.
ஆனால், தமன்னாவை விளம்பரத் துாதராக நியமித்த பின், கடந்த மே மாதத்தில் மட்டும் மைசூரு சாண்டல் சோப்பின் விற்பனை, 24 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, 'இனி எனக்கு எதிராக யாரும் வாய் திறக்க முடியாது...' என உற்சாகத்தில் உள்ளார், சித்தராமையா.