PUBLISHED ON : அக் 24, 2024 12:00 AM

'வயதாகி விட்டதல்லவா; அதனால்தான் கோபம் அதிகமாக வருகிறது...' என, கர்நாடக முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையாவை கிண்டல் அடிக்கின்றனர், எதிர்க்கட்சியினர்.
மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தில்விதிகளை மீறி, சித்தராமையாவின் மனைவிக்கு, 14 மனைகள் ஒதுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.
இது தொடர்பாக, சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க, கர்நாடக கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்; உயர் நீதிமன்றமும் விசாரணைக்கு பச்சைக்கொடி காட்டி விட்டது. இதன்படி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடக்கிறது.
இதையடுத்து, 'சித்தராமையா முதல்வர் பதவியைராஜினாமா செய்து விட்டு, விசாரணையை எதிர் கொள்ள வேண்டும்...' என, பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா,'சித்தராமையாவால் ரொம்ப நாளைக்கு இந்தபதவியில் தாக்குப்பிடிக்க முடியாது. விரைவில் ராஜினாமா செய்வார்...' என்கிறார்.
அவரது பேச்சு, சித்தராமையாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி விட்டது. 'விஜயேந்திரா என்ன ஜோதிடரா... அப்படியானால், அவரதுதந்தையும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா மீதும்தான், 'போக்சோ' வழக்கு உள்ளது. அந்த வழக்கில், தன் தந்தைக்கு என்ன தண்டனை கிடைக்கும் என விஜயேந்திராவால் கூற முடியுமா...'என, கொதித்தார்.
'சித்தராமையாவுக்கு, காங்கிரசுக்குள்ளேயே போர்க்குரல் அதிகரித்துள்ளது. அதனால்தான் ஆவேசப்படுகிறார்...' என்கின்றனர், எதிர்க்கட்சியினர்.

