PUBLISHED ON : நவ 10, 2025 12:00 AM

'இளமை காலத்தில் கற்ற விஷயம், இவருக்கு இப்போது கை கொடுக்கிறது...' என, முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜிவ் பிரதாப் ரூடியை பற்றி பேசுகின்றனர், சக அரசியல்வாதிகள்.
ராஜிவ் பிரதாப் ரூடி, வாஜ்பாய் பிரதமராக இருந்த போதே, அவரது அரசில், மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சராக பதவி வகித்தவர். நான்கு முறை லோக்சபா எம்.பி., யாக இருந்துள்ளார்.
பீஹாரைச் சேர்ந்த இவர், மோடி தலைமையிலான அரசிலும், 2017 வரை மத்திய அமைச்சராக பதவி வகித்தார். அதற்கு பின், அவருக்கு அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், தீவிர அரசியலில் தொடர்ந்து இயங்கி வருகிறார்.
ராஜிவ் பிரதாப் ரூடி, அரசியலுக்கு வருவதற்கு முன், விமானம் ஓட்டுவதற்கு முறையாக பயிற்சி பெற்று, பிரபல விமான நிறுவனங்களில் பைலட்டாக பணிபுரிந்தார்.
சமீபத்தில் டில்லியில் இருந்து பீஹார் மாநிலம் பாட்னாவுக்கு சென்ற விமானத்தில் பயணித்தவர் களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த விமானத்தின் பைலட்டாக பணி புரிந்த ராஜிவ் பிரதாப் ரூடி, பயணியரிடம் தன்னை அறிமுகப் படுத்தியதுடன், விமானம் எத்தனை அடி உயரத்துக்கு மேல் பறக்கிறது; வானிலை நிலவரம் போன்ற அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
இதை கேள்விப்பட்ட சக அரசியல்வாதிகள், 'அரசியலில் பெரிய வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், விமானம் ஓட்டியாவது காலத்தை கழித்து விடலாம் என்ற முடிவுக்கு ராஜிவ் பிரதாப் ரூடி வந்து விட்டார் போலிருக்கிறது. கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் என்ற பழமொழி சரியாகத் தான் இருக்கிறது...' என, கூறுகின்றனர்.

