PUBLISHED ON : ஆக 24, 2026 12:27 AM

'காங்கிரஸ் கட்சியில், அடுத்த வாரிசு தயாராகி விட்டது...' என, டில்லியில் உள்ள அரசியல்வாதி களிடையே பேச்சு அடிபடுகிறது.
காங்., மீது ஏற்கனவே வாரிசு அரசியல் கட்சி என்ற குற்றச்சாட்டு உள்ளது. நேரு, இந்திரா, ராஜிவ், சோனியா, ராகுல், பிரியங்கா என, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான், அந்த கட்சியை இன்று வரை வழி நடத்தி வருகின்றனர்.
'வாரிசு அரசியல்' என்ற கோஷத்தை முன்னிறுத்தி தான், காங்., கட்சியை தொடர்ந்து மூன்று லோக்சபா தேர்தல்களிலும், பா.ஜ., தோல்வி அடையச் செய்துள்ளது. ஆனாலும், அந்த கட்சித் தலைவர்கள் அதை பொருட் படுத்துவதாக தெரியவில்லை.
இந்த சூழலில், லோக்சபா எதிர்க் கட்சித் தலைவரான ராகுல், சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜுக்கு சென்றார். அவரது மூதாதையர்கள் அங்கு தான் வசித்தனர். ராகுல் அங்கு சென்றபோது, தன் சகோதரி பிரியங்காவின் மகளான, 24 வயதான மிரயாவையும் உடன் அழைத்து சென்றார்.
அங்குள்ள கல்லுாரி மாணவர்களுடன், 'இளைஞர்களின் குரல்' என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியிலும் மிரயா பங்கேற்றார். இது, காங்., தலைவர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
'தனக்கும், தன் சகோதரி பிரியங்காவுக்கும் மக்களிடம் செல்வாக்கு இல்லை என்பதால், தன் மருமகளை அரசியலில் அறிமுகப்படுத்தும் முடிவுக்கு ராகுல் வந்து விட்டார் போலிருக்கிறது...' என, பா.ஜ., தலைவர்கள் கிண்டல் அடிக்கின்றனர்.
