PUBLISHED ON : பிப் 23, 2024 12:00 AM

'கட்சியின் மூத்த தலைவர்களே தேர்தலில் போட்டியிட தயங்கினால் எப்படி...' என ஆதங்கப்படுகின்றனர், காங்கிரசில் உள்ள இளம் தலைமுறையினர்.
கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா, உடல் நிலையை காரணம் காட்டி, ஏற்கனவே தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஒதுங்கி விட்டார்.
இந்நிலையில், தற்போதைய தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவை, தங்கள் மாநிலத்திலிருந்து ஏதாவது ஒரு தொகுதியில் லோக்சபா தேர்தலில் போட்டியிடும்படி, காங்கிரஸ் கட்சியினர் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அவரது சொந்த மாநிலமான கர்நாடகாவைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள், கலபுரகி தொகுதியில் போட்டியிடும்படி வற்புறுத்தி வருகின்றனர். கடந்த லோக்சபா தேர்தலில், இந்த தொகுதியில் தான் போட்டியிட்டு அவர் தோல்வி அடைந்தார்.
இதனால், தற்போது அதே தொகுதியில் போட்டியிட்டு, இழந்த செல்வாக்கை மீட்கும்படி வற்புறுத்தி வருகின்றனர்.
ஆனால் கார்கேவோ, 'இப்போது ராஜ்யசபா எம்.பி.,யாக இருக்கிறேன். ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகிக்கிறேன். இதை ராஜினாமா செய்துவிட்டு எதற்கு லோக்சபா தேர்தலில் போட்டியிட வேண்டும்...' என, தயக்கம் காட்டுகிறார்.
கட்சி நிர்வாகிகளோ, 'தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயம் காரணமாக, கார்கே இப்படி சாக்கு போக்கு சொல்கிறார். கட்சியின் தலைவரே நேரடியாக களத்தில் இறங்கினால் தானே, மற்றவர்களுக்கு தைரியம் வரும்...' என புலம்புகின்றனர்.