தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/ நம்பிக்கையுடன் உழைப்பும் இருந்தால் வெற்றி வசமாகும்!

 நம்பிக்கையுடன் உழைப்பும் இருந்தால் வெற்றி வசமாகும்!

 நம்பிக்கையுடன் உழைப்பும் இருந்தால் வெற்றி வசமாகும்!


PUBLISHED ON : மார் 03, 2026 01:40 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 03, 2026 01:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அடுத்தடுத்து, நான்கு அரசு தேர்வுகளில் வெற்றி பெற்று சாதித்த, சிவகங்கை மாவட்டம், கட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி: எங்கள் ஊர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 வரை படித்தேன். படிப்பில் எப்போதும் முதலிடம் தான். படித்து ஆசிரியை ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது.

ஸ்ரீ மீனாட்சி மகளிர் அரசினர் கலை கல்லுாரியில், முதுகலை இயற்பியல் படித்தேன். ஏ.பி.ஜெ., அப்துல் கலாம் அறக்கட்டளையில் இருந்து, தன்னம்பிக்கை கொடுக்கும் விதமாக பேசினர். அந்த நிகழ்ச்சி, என் வாழ்க்கையை மாற்றிய முக்கிய தருணமாக அமைந்தது.

இதனால், அரசு போட்டி தேர்வுகளை எழுத முடிவு செய்தேன். முதலில், சென்னை உயர் நீதிமன்ற அலுவலக உதவியாளர் தேர்வு எழுதினேன்; வேலையும் கிடைத்தது. ஆனால், அந்த வேலையில் சேர எனக்கு விருப்பம் இல்லை.

தொடர்ந்து, தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு தயாராக துவங்கினேன். முதலில் டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 2ஏ' தேர்வில் வெற்றி பெற்று, சுகாதார துறை உதவியாளராக எட்டு மாதங்கள் வேலை பார்த்தேன்.

அடுத்து, 'குரூப் - 4' தேர்வு எழுதி, மதுரையில் கூட்டுறவு துறையில் இளநிலை ஆய்வாளர் வேலையில் சேர்ந்தேன். 'முடிவு எடுக்கும் அதிகாரம் இருக்கும் அரசு பதவிக்கு நாம ஏன் போகக்கூடாது' என்று நினைத்தேன். மறுபடியும் தேர்வுகளுக்கு தயாராக ஆரம்பித்தேன்.

'குரூப் - 2' தேர்வு எழுதி, புதுக்கோட்டையில் வனத்துறை அதிகாரியாக, கடந்த மூன்று மாதங்களாக பணிபுரிகிறேன்.

நான் ஆறாம் வகுப்பு வரை உள்ள பள்ளி புத்தகங்களை முழுமையாக படித்தேன். அதுதான் தேர்வுகளுக்கான அடித்தளமாக அமைந்தது. மற்றபடி, எந்த பயிற்சி வகுப்பிலும் சேர்ந்து படிக்கவில்லை.

என் முயற்சிகளுக்கு அப்பாவும், அண்ணனும் தொடர்ந்து ஆதரவு கொடுத்தனர். ஆனாலும், 23 வயது ஆகும்போது எனக்கு திருமணம் செய்து கொடுத்து விடும்படி அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் கூறினர்.

ஆனால், நான் போட்டி தேர்வுகளுக்கு படிப்பதில் உறுதியாக இருந்தேன். இப்போது, என்னை அரசு அதிகாரியாக பார்க்கும் பலரும், என் பெற்றோரை பாராட்டுகின்றனர். இதுதான் எனக்கு பெரிய வெற்றி.

'டி.என்.பி.எஸ்.சி., தேர்வை, 29 லட்சம் பேர் எழுதுகின்றனர். நமக்கு எப்படி வேலை கிடைக்கும்' என்று பயப்பட வேண்டாம். எனக்கு எப்படியும் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், உழைப்பும் இருந்தால் வெற்றி வசமாகும்.

தற்போது, 'குரூப் - 1' முதன்மை தேர்வு எழுதிவிட்டு, முடிவுக்காக காத்திருக்கிறேன். மத்திய அரசு பணியாளர் தேர்வுகள் தான் என் அடுத்த இலக்கு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us