PUBLISHED ON : ஏப் 13, 2026 12:32 AM

'மக்களுக்காக அரசியல் கட்சியை நடத்துகிறோம் என்கின்றனர். ஆனால், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தினால் எதிர்ப்பு தெரிவிக்கின்றனரே...' என, காங்கிரஸ் கட்சியினரை பார்த்து கேட்கின்றனர், பா.ஜ., தலைவர்கள்.
பார்லிமென்ட் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது, நாட்டில் உள்ள பெரும்பாலான மக்களின் நீண்ட கால கோரிக்கை.
ஒரு வழியாக, கடந்த, 2023 செப்டம்பரில், பிரதமர் மோடி தலைமையிலான, மத்திய, பா.ஜ., அரசு பார்லிமென்டில் இது தொடர்பான சட்ட மசோதாவை நிறைவேற்றியது. ஆனாலும், இந்த மசோதாவை, சட்டமாக மாற்றுவதில் சிக்கல்கள் உள்ளன.
இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண பார்லிமென்ட் சிறப்பு கூட்டத் தொடரை, வரும், 16ல் மத்திய அரசு கூட்டியுள்ளது. ஆனால், வழக்கம் போல், எதிர்க்கட்சியான காங்கிரஸ், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, 'தற்போது தமிழகம், மேற்கு வங்கம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடக்கின்றன. இது போன்ற நேரத்தில், அவசரம் அவசரமாக மகளிர் மசோதாவை, மத்திய அரசு கையில் எடுத்துள்ளதில், அரசியல் உள்நோக்கம் உள்ளது...' என்றார்.
பா.ஜ., வினரோ, 'எதிர்க்கட்சி தலைவரான கார்கே, மத்திய அரசை எதிர்ப்பதில் தவறில்லை. ஆனால், மத்திய அரசு மேற்கொள்ளும் நல்ல விஷயங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிப்பது, எந்த வகையில் நியாயம்...' என, குமுறுகின்றனர்.

