PUBLISHED ON : ஏப் 03, 2025 12:00 AM

'தேர்தல் நேரத்தில் எதற்கு இந்த விஷப்பரீட்சை...' என கவலைப்படுகின்றனர், கேரள மாநில பா.ஜ., நிர்வாகிகளும், தொண்டர்களும்!
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கு முழு வீச்சில் தயாராகி வருகிறது, பா.ஜ., மேலிடம். இதற்கு முன்னோட்டமாக, கேரள மாநில பா.ஜ., தலைவராக இருந்த சுரேந்திரனை மாற்றி விட்டு, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகரை மாநில தலைவராக பா.ஜ., மேலிடம் நியமித்துள்ளது.
இது, கேரள மாநில பா.ஜ., தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 'ராஜிவ் சந்திரசேகர் மலையாளியாக இருந்தாலும், அவர் பெரும்பாலான நாட்கள் வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் தான் வசித்துள்ளார்.
'அவருக்கு மலையாளம் கூட சரியாக பேசத் தெரியாது. அரசியலுக்கு வருவதற்கு முன் தொழிலதிபராக இருந்தவர். சாதாரண தொண்டர்கள், ஏழைகளின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவரால் புரிந்துகொள்ள முடியாது....' என, கேரள பா.ஜ.,வினர் கவலைப்படுகின்றனர்.
இதற்கு முந்தைய சட்டசபை தேர்தலிலும், மெட்ரோ ஸ்ரீதரன் என்ற அதிகாரியை முதல்வர் வேட்பாளர் போல் முன்னிறுத்தினர்; ஆனால், தோல்வி தான் கிடைத்தது. 'சாதாரண மக்களுடன் நெருக்கமாக இருக்கும் ஒரு வெகுஜன தலைவர் கிடைக்கவில்லையா...' என, புலம்புகின்றனர், கேரளாவில் உள்ள பா.ஜ., நிர்வாகிகள்.

