PUBLISHED ON : ஜன 07, 2026 03:58 AM

'என்ன இருந்தாலும், பொது இடத்தில் அவர் இப்படி நடந்திருக்கக் கூடாது...' என, காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் பற்றி வருத்தப்படுகின்றனர், கட்சியின் மூத்த தலைவர்கள்.
டில்லியில் சமீபத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடந்தது. இதில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை, 'விபி - ஜி ராம் - ஜி' என, மத்திய அரசு மாற்றியதை கண்டித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செயற்குழு முடிந்ததும், அதில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் பேட்டி அளித்தனர்.
அப்போது, மத்திய அரசை கண்டித்து, நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செய்தியாளர்களுக்கு விளக்கும்படி, ஜெய்ராம் ரமேஷிடம் கார்கே அறிவுறுத்தினார். அதை ஏற்க மறுத்த ஜெய்ராம் ரமேஷ், 'நீங்களே தீர்மானத்தை படித்து, விளக்கி கூறுங்கள்...' என, கார்கேவுக்கு உத்தரவிட்டார்.
இது, அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. 'கட்சியில் மூத்தவர், இளையவர் என்ற மரியாதை இல்லையா... இவ்வளவு பேருக்கு மத்தியில், கார்கேவுக்கு உத்தரவிடுவது போல் ஜெய்ராம் ரமேஷ் செயல்பட்டது சரியல்ல...' என, அனைவரும் முணுமுணுத்தனர்.
ஜெய்ராம் ரமேஷ் ஆதரவாளர்களோ, 'எதார்த்தமாக நடந்த சின்ன விஷயத்தை எதற்கு பெரிதுபடுத்துகின்றனர்...' என, புலம்பினர்.

