PUBLISHED ON : பிப் 18, 2026 01:26 AM

'தேர்தல் தேதி அறிவித்த பின், இன்னும் என்னென்ன கூத்துகள் அரங்கேற காத்திருக்கிறதோ...' என புலம்புகின்றனர், கேரள மக்கள்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
தற்போதைய இளம் தலைமுறை வாக்காளர்களை கவர்வதற்காக, அரசியல் கட்சித் தலைவர்கள் புதுப்புது வியூகங்களை வகுத்து வருகின்றனர். இங்கு, கேரள காங்கிரஸ் - எம் என்ற அரசியல் கட்சி இயங்குகிறது. இந்த கட்சி, ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இந்த கட்சியின் தலைவர் அகஸ்டின், மாநில நீர்வளத்துறை அமைச்சராக உள்ளார்.
இவர், சமீபத்தில் மிகவும் விலை உயர்ந்த, 'ராயல் என்பீல்டு' பைக்கை நீண்ட துாரம் ஓட்டிச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. இது குறித்து அகஸ்டினிடம் கேட்டபோது, 'நான் பைக்கில் சென்றது உண்மை தான். ஆனால், அந்த வீடியோவை எடுத்தது யார் என தெரியவில்லை...' என்றார்.
'இளம் தலைமுறையினரின் கவனத்தை ஈர்ப்பதற்காக, அகஸ்டினே ஆள் வைத்து வீடியோ எடுத்து, அதை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இதை ஒப்புக்கொள்வதில் அவருக்கு என்ன தயக்கம்... தேவையா இந்த வெற்று விளம்பரம்?' என, கேரள மக்கள் கிண்டல் அடிக்கின்றனர்.

