PUBLISHED ON : அக் 22, 2025 12:00 AM

'தேவையில்லாத விஷயத்தை பெரிதுபடுத்தி, சர்ச்சையை ஏற்படுத்தி விட்டாரே..' என, உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவை கிண்டல் அடிக்கின்றனர், பிற கட்சி அரசியல்வாதிகள்.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. எதிர்க்கட்சி தலைவரான அகிலேஷ் யாதவை, சமூக வலைதளமான, 'பேஸ்புக்'கில், 80 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். இதனால், உ.பி.,யில் பா.ஜ., ஆட்சியின் திட்டங்களை விமர்சித்து, சமூக வலைதளத்தில் தினமும் கருத்துகளை பதிவிட்டு வந்தார், அகிலேஷ்.
சமீபத்தில் அவரது, 'பேஸ்புக்' கணக்கு திடீரென முடங்கியது. அதிர்ச்சி அடைந்த அகிலேஷ், 'மத்திய பா.ஜ., அரசின் உத்தரவின்படி தான், என் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. பா.ஜ.,வை விமர்சிப்பவர்களின் குரலை எல்லாம் அடக்க முயற்சிக்கின்றனர். இதை கண்டித்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்...' என, ஆவேசமாக அறிக்கை வெளியிட்டார்.
'அகிலேஷின் பேஸ்புக் கணக்கு முடக்கத்துக்கும், மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...' என, அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டாலும், அகிலேஷ் அடங்குவதாக தெரியவில்லை.
இதையடுத்து, 'பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கும் பதிவுகள் அதிகம் இடம் பெற்றிருந்ததால், அகிலேஷின் கணக்கு முடக்கப்பட்டது...' என, பேஸ்புக் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு, பின், கணக்கு முடக்கம் திரும்ப பெறப்பட்டது.
'அகிலேஷுக்கு இந்த அவமானம் தேவையா...?' என, மற்ற கட்சியினர் கிண்டல் அடிக்கின்றனர்.