PUBLISHED ON : செப் 02, 2024 12:00 AM

'பதவி வந்தவுடன் தலைகால் புரியாமல் ஆடினால் இப்படித் தான் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்...' என, தெலுங்கானா முதல்வரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான ரேவந்த் ரெட்டியை கிண்டலடிக்கின்றனர், எதிர்க்கட்சியினர்.
தெலுங்கானாவில் கடந்த சட்டசபை தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.இங்கு தனிக்காட்டு ராஜாவாக ஆதிக்கம் செலுத்தி வந்த, பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், மூன்றாவது முறையாக வெற்றி பெற்று, 'ஹாட்ரிக்'அடித்து முதல்வராவார் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது.
ஆட்சியில் அமர்ந்ததும் அடக்கம் ஒடுக்கமாக, நல்ல பிள்ளையாக இருந்த ரேவந்த் ரெட்டி, பதவி சுகம் தந்த போதையில் இப்போது வேலையை காட்டத் துவங்கியுள்ளார். சந்திரசேகர ராவின் மகள் கவிதா, டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிக்கி, ஐந்து மாத சிறைவாசத்துக்கு பின், சமீபத்தில் வெளியில் வந்தார்.இது குறித்து விமர்சித்த ரேவந்த் ரெட்டி, 'பா.ஜ.,வுக்கும், பாரத் ராஷ்ட்ர சமிதிக்கும் உடன்பாடு ஏற்பட்டு விட்டது. அதனால் தான்,
கவிதாவுக்கு ஜாமின் கிடைத்துள்ளது...' என்றார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், 'உங்கள் அரசியலுக்குள் எங்களை இழுக்காதீர்கள்...' என, ரேவந்த் ரெட்டியை கண்டித்தது.இதனால் அரண்டு போன ரேவந்த் ரெட்டி,
பகிரங்க மன்னிப்பு கேட்டு, நீதிபதிகளின் கோப பார்வையிலிருந்து தப்பித்துள்ளார்.
'ரேவந்த் ரெட்டி சும்மாயிருந்தாலும், அவரது வாய் சும்மாயிருக்காது...' என, கிண்டலடிக்கின்றனர்.