PUBLISHED ON : மார் 30, 2025 12:00 AM

'அரசியலில் மட்டும்தான் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கும்...' என, விரக்தியுடன் பேசுகின்றனர், உத்தர பிரதேச மாநில எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியின் மூத்த நிர்வாகிகள்.
இங்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தொடர்ச்சியாக இரண்டு முறை பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. மூன்றாவது முறையாக, 'ஹாட்ரிக்' அடிக்கக் காத்திருக்கிறார், ஆதித்யநாத்.
இவரிடம் இருந்து ஆட்சியை தட்டிப்பறிக்க தீவிரமாக முயற்சித்து வருகிறார், சமாஜ்வாதி தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ்.
'முயற்சி செய்வது எல்லாம் சரிதான். ஆனால், நமக்காக ஒரு காலத்தில் கடுமையாக உழைத்தவர்களை உதாசீனப்படுத்துவதை எப்படி ஏற்க முடியும்...' என, ஆதங்கப்படுகின்றனர், சமாஜ்வாதி நிர்வாகிகள்.
கடந்த, 2012 - 17ல் அகிலேஷ் யாதவ் முதல்வராக பதவி வகித்தபோது, அவரது வலதுகரமாக செயல்பட்டவர், பிரபல எழுத்தாளர் மனோஜ் யாதவ்.
அகிலேஷுக்கு அரசியல் மற்றும் நிர்வாக ரீதியான ஆலோசனைகளை வழங்கியவர். அகிலேஷ் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சென்று, அவரது பிரசார பீரங்கியாகவே வலம் வந்தார். ஆனால், அடுத்த தேர்தலில் அகிலேஷ் தோல்வி அடைந்ததும், மனோஜ் யாதவை ஓரம் கட்டினார்.
சமீபத்தில், இந்த மனோஜ் யாதவ், உடல்நலக் குறைவால் காலமானார். ஆனால், அவருக்கு அகிலேஷ் யாதவ் அஞ்சலி செலுத்தக்கூட போகவில்லை. குறைந்தபட்சம் ஒரு இரங்கல் அறிக்கை கூட வெளியிடவில்லை.
'நன்றி மறப்பது நன்றல்ல...' என்கின்றனர், சமாஜ்வாதி கட்சியின் மூத்த நிர்வாகிகள்.