PUBLISHED ON : ஏப் 11, 2025 12:00 AM

'தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது என்ன சோதனை...' என, கவலைப்படுகிறார், கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூ., மூத்த தலைவருமான பினராயி விஜயன்.
வெளிநாடுகளில் இருந்து, கேரளாவுக்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வரப்பட்ட வழக்கில், பினராயி விஜயனின் செயலராக இருந்த அதிகாரி மீது ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன.
தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது என்பது போல், இந்த விவகாரத்தில் இதுவரை அவருக்கு பெரிய சட்டச் சிக்கல் எதுவும் வரவில்லை; ஆனாலும், முதல்வரின் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது.
கேரளாவில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதில் பினராயி விஜயன் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்த நேரத்தில் தான் இடி போன்ற ஒரு செய்தி வந்துள்ளது. பினராயி விஜயனின் மகள் வீணா நடத்தி வந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஒரு தனியார்சுரங்க நிறுவனத்திடம் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க முடிவு செய்துள்ளது; இது, வீணாவுக்கு மட்டுமல்லாமல் பினராயி விஜயனுக்கும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
'வழக்கு ஒரு பக்கம் இருந்தாலும், ஊழல் செய்து விட்டதாக தேர்தலில் எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்தால், முதலுக்கே மோசம் வந்து விடுமே...' என்ற கலக்கத்தில் உள்ளார், பினராயி விஜயன்.

