PUBLISHED ON : ஜூலை 20, 2025 12:00 AM

'அடுக்கடுக்காக வழக்குகள் பாய்ந்தால், அவரால் என்ன செய்ய முடியும்...' என, டில்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை பார்த்து பரிதாபப் படுகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.
டில்லியில், முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. முன்னாள் முதல்வரான கெஜ்ரிவாலுக்கு எதிராக ஏற்கனவே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மதுபான கொள்கை முறைகேடு குறித்த வழக்கில், கெஜ்ரிவாலும், அவரது கட்சியின் முன்னணி தலைவர்களும் டில்லி திஹார் சிறையில் ஏற்கனவே அடைக்கப்பட்டு, தற்போது ஜாமினில் வந்துள்ளனர்.
டில்லியில் பள்ளிகள் கட்டியதில் முறைகேடு நடந்ததாகவும், கெஜ்ரிவாலுக்கான அரசு பங்களா புதுப்பிக்கப்பட்டதில் ஊழல் நடந்ததாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது போதாது என்று, கெஜ்ரிவால் ஆட்சி காலத்தில், போட்டித்தேர்வில் ஏழை மாணவர்கள் பங்கேற்பதற்காக செயல்படுத்தப்பட்ட இலவச பயிற்சி திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
'இந்த திட்டத்தின் மொத்த பட்ஜெட்டே, 15 கோடி ரூபாய் தான். ஆனால், 145 கோடி ரூபாய்க்கு போலி பில்கள் தயாரிக்கப்பட்டு, அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது...' என, பா.ஜ.,வினர் கூறியுள்ளனர். இந்த ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு, டில்லி கவர்னர் சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.
இதனால் சோர்வடைந்துள்ள ஆம் ஆத்மி கட்சியினர், 'இந்த வழக்குகளில் இருந்து கெஜ்ரிவால் மீண்டு வருவது சிரமம் தான்...' என, புலம்புகின்றனர்.

