PUBLISHED ON : ஆக 10, 2025 12:00 AM

'என்ன செய்தாலும், நமக்கு எதிராகவே திரும்புகிறதே...' என கவலைப்படுகிறார், காங்கிரஸ் எம்.பி., ராகுல். தொடர்ச்சியாக மூன்று லோக்சபா தேர்தல்களில் தோல்வியை சந்தித்துள்ள காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் மிகவும் சோர்வடைந்துள்ளனர்.
'தொடர்ச்சியாக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தால், தொண்டர்களும், நிர்வாகிகளும் வேறு கட்சிகளுக்கு ஓடி விடுவர்...' என, மூத்த தலைவர்கள் கவலைப்படுகின்றனர்.
இந்நிலையில், 'இண்டியா' என்ற பெயரில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலை சந்தித்தார், ராகுல். அந்த முயற்சி பலன் அளிக்காமல், மீண்டும் தோல்வி தான் கிடைத்தது. இதையடுத்து, அந்த கூட்டணி யில் இருந்த சில கட்சிகள் விலகின.
இதனால், மீண்டும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கினார், ராகுல். சமீபத்தில், டில்லியில் உள்ள தன் வீட்டில், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு விருந்தளித்தார். அதன்பின் ஆலோசனை கூட்டமும் நடந்தது.
இந்த கூட்டத்தில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே கடைசி வரிசையில் அமர்ந்திருந்தார். இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்த பா.ஜ.,வினர், 'உத்தவ் தாக்கரே எங்கள் கூட்டணியில் இருந்தபோது அளப்பரிய மரியாதை அளித்தோம். இப்போது அவரது மகனுக்கு, காங்கிரஸ் கட்சி கடைசி வரிசையை ஒதுக்கி அவமதித்து விட்டது...' என, விமர்சிக்கின்றனர்.
ராகுலோ, 'நாம் என்ன செஞ்சாலும், அது நமக்கு எதிராகவே முடியுதே...' என, புலம்புகிறார்.