PUBLISHED ON : மார் 20, 2024 12:00 AM

'அரசியலையும், இவர்களையும் பிரிக்கவே முடியாது போலிருக்கிறது...' என புலம்புகிறார், ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட்.
ஒரு கட்சியின் தலைவருக்கு ஜால்ரா போட்டு, அவருக்கு முன் வளைந்து, நெளிந்து, ஓரளவுக்கு வளர்ந்த பின், அவரது முதுகிலேயே குத்தி விட்டு பதவியை ஆக்கிரமிக்கும் தலைவர்கள் அதிகம் உள்ளனர்.
இப்படிப்பட்டவர்கள் தான், 'அரசியல் அமாவாசைகள்' என அழைக்கப்படுகின்றனர். வளைந்து, நெளிந்த காலம் போய், இப்போது தவழ்ந்து, ஊர்ந்து செல்லும் நடைமுறையும் உருவாகி விட்டது.
ராஜஸ்தான் அரசியலில், தனக்கு போட்டியாக சச்சின் பைலட் உருவெடுத்தபோது, அவரது மாநில தலைவர் பதவியை, தன்னுடைய தீவிர விசுவாசியான கோவிந்த் சிங் என்பவருக்கு வாங்கி கொடுத்தார், கெலாட்.
அவரும், தன் விசுவாசத்தை காட்டுவதற்காக கெலாட் முன், வளைந்து, நெளிந்து வலம் வந்தார். கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால், கெலாட்டின் முதல்வர் பதவி பறிபோய் விட்டது.
அதன்பின், கோவிந்த் சிங்கின் நடவடிக்கையும் மாறி விட்டது. கட்சி கூட்டத்தில் பங்கேற்க கெலாட் வந்தால், முகத்தை திருப்பிக் கொள்ளும் கோவிந்த் சிங், 'முன்னாள் முதல்வர் என்றால் ஓரமாகப் போக வேண்டியது தானே...' என, கிண்டலடிக்கும் அளவுக்கு நிலைமை கை மீறி விட்டது.
இதைப் பார்த்த கெலாட், 'இது அமாவாசைகளின் காலம் போலிருக்கிறது. வயதான காலத்தில் எனக்கு இவ்வளவு சோதனையா...' என, கதறுகிறார்.

