PUBLISHED ON : ஆக 25, 2025 12:00 AM

'நடப்பது எல்லாம் நமக்கு சாதகமாகவே உள்ளது... ' என, மகிழ்ச்சியில் திளைக்கிறார், கர்நாடகா முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா.
இங்கு, சித்தராமையாவிடமிருந்து முதல்வர் பதவியை எப்படியாவது கைப்பற்றி விடலாம் என, துணை முதல்வரும், அம்மாநில காங்., தலைவருமான சிவகுமார் தொடர்ந்து முயற்சித்து வந்தார். அந்த முயற்சி இதுவரை பலிக்கவில்லை.
இந்த நிலையில் தான், சமீபத்தில் கர்நாடகா சட்டசபையில், ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின், 'நமஸ்தே சதா வத்சலே மாத்ருபூமே...' என்ற பாடலின் இரண்டு வரிகளை சிவகுமார் பாடியது, அங்கு அரசியல் புயலை கிளப்பி உள்ளது.
சிவகுமாரின் இந்த நடவடிக்கை, காங்கிரஸ் தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அவரிடமிருந்து துணை முதல்வர் பதவியும், மாநில தலைவர் பதவியும் பறிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு விளக்கம் அளித்த சிவகுமார், 'ஆர்.எஸ்.எஸ்., பாடலை பாடியதால், நான், பா.ஜ.,வில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த பாடலுக்கு, 'எப்போதும் அன்பு காட்டும் தாய் மண்ணே வணக்கம்' என்பது தான் அர்த்தம். இதை பாடியதில் என்ன தவறு இருக்கிறது...' என, தெரிவித்துள்ளார்.
முதல்வர் சித்தராமையா தரப்பினரோ, 'முதல்வர் பதவி கிடைக்காததால், கட்சி தாவும் மனநிலைக்கு வந்து விட்டார் சிவகுமார். விரைவில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விடுவார். அதற்கு பின், எங்கள் தலைவர் மட்டும் தான் தனிக்காட்டு ராஜா...' என, உற்சாகத்துடன் கூறுகின்றனர்.