PUBLISHED ON : டிச 04, 2025 12:13 AM

'விஷயம் தெரியும் வரை மட்டுமே பணிவு; தெரிந்து விட்டால், அப்புறம் அதிரடி தான்...' என, ராஜஸ்தான் முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பஜன்லால் சர்மா பற்றி கூறுகின்றனர், அவரது அமைச்சரவையில் உள்ளவர்கள்.
ராஜஸ்தானில், 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான வசுந்தரா ராஜே சிந்தியா முதல்வராவார் என, அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால், புதுமுகமான பஜன்லால் சர்மாவுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. இதற்கு முன், அவர் எம்.எல்.ஏ.,வாக கூட இருந்தது இல்லை. அவரது சொந்த கிராமத்தில், பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்த அனுபவம் மட்டுமே அவருக்கு உண்டு.
இதனால், 'புதுமுகமான பஜன்லால் சர்மாவை, முக்கிய பதவியில் அமர்த்தியுள்ளனர். அவர் தாக்குப் பிடிப்பது சிரமம் தான்...' என, பலரும் கூறினர். அதுபோலவே பதவியேற்றதில் இருந்து, இரண்டு ஆண்டுகள் வரை அவர் அமைதியாகவே இருந்தார்.
யார் என்ன கூறினாலும், அதை கேட்டு நடவடிக்கை எடுத்தார். இப்போது இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், மெல்ல மெல்ல அதிரடிகளை துவக்கியுள்ளார்.
சமீபத்தில், தலைமை செயலர் உட்பட, 48 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை ஒரே நாளில் அதிரடியாக இடமாற்றம் செய்தார். ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டங்களையும் தன்னிச்சையாக நடத்துகிறார்.
அவரது அமைச்சர்களோ, 'எல்லா விஷயங்களையும் நம்மை கேட்டு செய்த பஜன்லால் சர்மா, இப்போது தனிக்காட்டு ராஜாவாக மாறி விட்டாரே...' என, புலம்புகின்றனர்.

