PUBLISHED ON : டிச 21, 2025 03:00 AM

'யாருமே எதிர்பார்க்காத விஷயத்தை செய்வது தான், பா.ஜ., மேலிட தலைவர்களின் வழக்கம். இப்போதும் அப்படித் தான் நடந்துள்ளது...' என்கின்றனர், அந்த கட்சியின் தொண்டர்கள்.
தற்போது, பா.ஜ., தேசிய தலைவராக உள்ள நட்டாவின் பதவிக் காலம், கடந்த ஆண்டே முடிந்துவிட்டாலும், கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலுக்காக நீட்டிக்கப்பட்டது. தேர்தலுக்கு பின், அவர் மத்திய அமைச்சராகி விட்டார். இதனால், பா.ஜ.,வுக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இதற்கிடையே, பா.ஜ.,வின் புதிய தலைவராக, முன்னாள் மத்திய அமைச்சரும், இளம் தலைமுறையைச் சேர்ந்தவருமான அனுராக் சிங் தாக்குர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. கட்சியின் மூத்த தலைவர்களான ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட பலரும், தலைவர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்த நிலையில் தான், வெளி உலகிற்கு அதிகம் அறிமுகம் இல்லாதவரும், பீஹார் அமைச்சருமான நிதின் நபினை, கட்சியின் செயல் தலைவராக நியமித்து, அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது, பா.ஜ., தலைமை.
பா.ஜ.,வின் தேசிய தலைவராக நியமிக்கப்படுபவர், முன்னதாக, செயல் தலைவராக நியமிக்கப்படுவது வழக்கம். ஓரளவு அனுபவம் ஏற்பட்டதும், அவரையே தேசிய தலைவராக அறிவிப்பர். நிதின் நபின் விஷயத்திலும் அப்படித் தான் நடக்கும்.
நிதின் நபினின் நியமனம், பதவியை எதிர்பார்த்து காத்திருந்த, பா.ஜ., மூத்த தலைவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

