PUBLISHED ON : டிச 20, 2025 12:13 AM

'என்ன தான் விமர்சனங்கள் இருந்தாலும், இது, அவருக்கு பெருமை சேர்க்கும் விஷயம் தானே...' என, மத்திய பிரதேச முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான மோகன் யாதவ் பற்றி கூறுகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.
ம.பி.,யில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது. ம.பி., மாநில பா.ஜ.,வில், சிவ்ராஜ் சிங் சவுகான் போன்ற மூத்த தலைவர்கள் இருந்தபோதும், அவ்வளவாக அறிமுகம் இல்லாத மோகன் யாதவுக்கு முதல்வர் பதவியை கொடுத்து, அழகு பார்த்தது, பா.ஜ., மேலிடம்.
'நிர்வாக அனுபவம் இல்லாதவருக்கு முதல்வர் பதவியை கொடுத்தது, தவறான முன் உதாரணம்...' என, பலரும் விமர்சனம் செய்தனர். ஆனாலும், பெரிய அளவில் எந்தவித பிரச்னையும் இல்லாமல், இரண்டு ஆண்டுகளை கடந்து வந்துவிட்டார், மோகன் யாதவ்.
ம.பி.,யின் குறிப்பிட்ட சில பகுதிகளில், பல ஆண்டுகளாக நக்சல்கள் பிரச்னை இருந்து வருகிறது. அதை ஒழிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தன. இதற்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. இங்கிருந்த நக்சல்கள் அனைவரும் ஒழிக்கப்பட்டுள்ளனர்; பலர், சரண் அடைந்துள்ளனர்.
இதையடுத்து, ம.பி.,யை நக்சல் இல்லாத மாநிலமாக விரைவில் அறிவிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், சந்தோஷத்தில் திளைக்கும் மோகன் யாதவ், 'இத்தனை ஆண்டுகளாக முதல்வர்களாக இருந்தவர்களுக்கு கிடைக்காத பெருமை, எனக்கு கிடைத்துள்ளது. என் மீதான விமர்சனங்களுக்கு இதுவே பதில்...' என்கிறார்.

