PUBLISHED ON : நவ 07, 2024 12:00 AM

'நன்றாகத் தான் பேசுகிறார்; ஆனாலும், மக்களிடம் எடுபடவில்லையே...' என, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பற்றி பேசுகின்றனர், டில்லியில் உள்ள அரசியல்வாதிகள்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே அதிகாரப்பூர்வமாகசெயல்பட்டு வந்தாலும், சோனியா, ராகுல், பிரியங்காஆகியோருக்கு தான், கட்சிநிர்வாகிகள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
'கார்கே, பெயரளவுக்கு தான் தலைவராக இருக்கிறார். முக்கிய முடிவுகளை எடுப்பது ராகுலும், சோனியாவும் தான்...' என,பா.ஜ.,வினர் அடிக்கடி கிண்டலடித்து வருகின்றனர்.
இதனால், இந்த இமேஜை உடைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார், கார்கே. பிரதமர் மோடி எந்த விஷயத்தை பற்றி பேசினாலும், அதற்கு உடனடியாக பதிலடி கொடுத்து பேசுவது, அறிக்கை வெளியிடுவது என, தீவிரமாக செயல்படத் துவங்கியுள்ளார்.
தேர்தல்களின் போது, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, மக்களை காங்கிரஸ் கட்சியினர் ஏமாற்றுவதாக பிரதமர் மோடி சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசினார்.
இதற்கு பதிலடியாக, 'ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றால், பெண்களுக்குமாதந்தோறும், 2,100 ரூபாய் உதவி தொகை அளிக்கப்படும் என, உங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதே; இதை நிறைவேற்ற முடியுமா...' என, மோடிக்கு கார்கே சவால் விடுத்தார்.
பா.ஜ.,வினரோ, 'பிரதமரை விமர்சித்தால் தான், தன் மீது ஊடக வெளிச்சம் படும் என, கார்கே நினைக்கிறார் போலிருக்கிறது...' என, கிண்டல் அடிக்கின்றனர்.