PUBLISHED ON : பிப் 09, 2024 12:00 AM

'எதிர்க்கட்சி தலைவர் என்ற மரியாதை இல்லாமல் ஈவு, இரக்கமின்றி செயல்படுகின்றனரே...' என கேரள மாநில காங்., மூத்த தலைவர் வி.டி. சதீஷன் புலம்புகிறார்.
இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
காங்கிரசைச் சேர்ந்த சதீஷன், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். சமீபத்தில் மாநில அரசின் முறைகேடுகளை கண்டித்து, காங்கிரஸ் சார்பில் திருவனந்தபுரத்தில் பெரிய போராட்டம் நடந்தது.
இதற்கு சதீஷன் தலைமை வகித்தார். கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் மேடையில் அமர்ந்திருந்தனர். அப்போது போராட்டத்தில் திடீரெனசலசலப்பு எழுந்தது. போலீசாருக்கும், காங்., கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டது.
பதற்றத்தை குறைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தினர். அதற்கும் பலன் இல்லாமல் போகவே, கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
இதில் ஒரு குண்டு, மேடைக்கு அருகில் வெடித்ததால், சதீஷன் உள்ளிட்ட தலைவர்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சதீஷன், குணமடைந்ததும் வீடு திரும்பினார்.
சமீபத்தில் தன் நண்பர்களிடம் பேசுகையில், 'மூத்த அரசியல் தலைவர்களை எப்படி நடத்த வேண்டும் என கேரள போலீசாருக்கு தெரியாதா. ஆட்சியாளர்களின் கைப்பாவையாக போலீசார் செயல்படலாமா. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், இதற்கு அவர்கள் பதில் சொல்லித் தான் தீர வேண்டும்...' என ஆதங்கப்பட்டார், சதீஷன்.

