
'பெரிதாக எதையோ சாதிக்கப் போகிறார் என பார்த்தால், இப்படி பயந்து நடுங்குகிறாரே...' என, பிரபல தேர்தல் வியூக நிபுணரும், ஜன் சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோர் பற்றி கிண்டல் அடிக்கின்றனர், பீஹாரில் உள்ள அரசியல்வாதிகள்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
இந்த முறை, பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் களத்தில் குதித்துள்ளது. இதற்கு முன், நாடு முழுதும் பல அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்து, வெற்றி பெற்று தந்தவர் பிரசாந்த் கிஷோர். இதனால், தன்னுடைய கட்சியையும் ஆட்சி கட்டிலில் ஏற்றி விடுவார் என்ற நம்பிக்கை, பீஹார் மக்களிடம் இருந்தது.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரசாந்த் கிஷோர், 'சட்டசபை தேர்தலில் நான் போட்டியிட போவது இல்லை. தேர்தலில் போட்டியிட்டால் அமைப்பு ரீதியான பணிகளில் என்னால் கவனம் செலுத்த முடியாது. ஆனால், எங்கள் கட்சி சார்பில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர். எங்கள் கட்சி, 10 - 15 தொகுதிகளில் வெற்றி பெறும்...' என்றார்.
'தேர்தல் வியூக நிபுணர், தேர்தலுக்கு முன்பாகவே தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டார். சரியான தொடை நடுங்கியாக இருக்கிறாரே...' என கிண்டல் அடிக்கின்றனர், அரசியல்வாதிகள்.