PUBLISHED ON : பிப் 12, 2025 12:00 AM

'தேர்தலில் தோல்வியை சந்தித்த நாலு நாளிலேயே கட்சி கலகலத்து விட்டதே...' என, ஆம் ஆத்மி கட்சி பற்றி ஆச்சரியப்படுகின்றனர், டில்லி மக்கள்.
டில்லியில் சமீபத்தில் நடந்த முடிந்த சட்டசபை தேர்தலில், ஆளுங்கட்சியாக இருந்த ஆம் ஆத்மி படுதோல்வி அடைந்தது. 27 ஆண்டுகளுக்குப் பின், பா.ஜ., மீண்டும் ஆட்சியை பிடித்து சாதித்துள்ளது. இதனால், ஆம் ஆத்மி கட்சிக்குள் பெரும் களேபரம் வெடித்து விட்டது.
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிறைக்கு சென்ற ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், தனக்கு பதிலாக ஆதிஷியை முதல்வராக்கினார்.
'அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று, அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதல்வராக பதவியேற்பார். அதுவரை, கெஜ்ரிவால் அமர்ந்த முதல்வர் நாற்காலியில் அமர மாட்டேன்...' என, உருக்கமாக பேசிய ஆதிஷி, முதல்வர் நாற்காலிக்கு அருகில், வேறு ஒரு நாற்காலி போட்டு அமர்ந்தார்.
ஆனால், தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலே தோல்வி அடைந்தார். ஆட்சியும் பறிபோய் விட்டது. அதேநேரம் ஆதிஷி, தான் போட்டியிட்ட கல்காஜி தொகுதியில் வெற்றி பெற்றார்.
இந்த தகவல் கிடைத்ததும், தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் நடனமாடினார், ஆதிஷி. இதைப் பார்த்த கெஜ்ரிவால் ஆதரவாளர்கள், 'ஆட்சி பறிபோய் விட்டது. கெஜ்ரிவாலும் தோற்று விட்டார். இந்த நேரத்தில் இவருக்கு என்ன ஆட்டம் வேண்டியிருக்கு...' என, ஆதிஷியை காய்ச்சி எடுக்கின்றனர்.

