PUBLISHED ON : பிப் 25, 2026 04:01 PM

எளிமைக்கும் நேர்மைக்கும் ஒரு உருவம் கொடுத்து உலவ விட்டால், அது தோழர் ஆர். நல்லகண்ணுவாகத்தான் இருக்கும். 'இப்படியொரு மனிதர் ரத்தமும் சதையுமாக நம்மிடையே வாழ்ந்தார்' என்பதை வருங்காலத் தலைமுறை ஒரு அதிசயக் கதையாகவே பார்க்கும். உழைக்கும் மக்களுக்காகவும், ஒடுக்கப்பட்டோருக்காகவும் தனது 101 வயது வரை ஓயாது ஒலித்த அந்தப் பேராளுமையின் வாழ்வு ஒரு திறந்த புத்தகம்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்த நல்லகண்ணு, பள்ளிப் பருவத்திலேயே புரட்சி நெருப்பைத் தாங்கியவர். வெள்ளையர்களுக்கு நிதி திரட்ட நடந்த நாடகத்தை மேடை ஏறித் தடுத்ததற்காக அடி உதை வாங்கிய அந்தச் சிறுவன், பின்னாளில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை உலுக்கிய போராட்டக்காரனாக வளர்ந்தார். காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸில் இணைந்தவர், பின்னாளில் ஏழை எளிய மக்களின் உண்மையான விடுதலை கம்யூனிசத்தில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து செங்கொடியைத் தன் உயிர்மூச்சாக ஏற்றுக் கொண்டார்.
ஆயுள் தண்டனை ரத்தாகி வெளியே வந்தபோது, அவரது கொள்கைப் பிடிப்பைக் கண்டு வியந்த சாதி ஒழிப்புப் போராளி சிவசுப்பிரமணியம், தனது மகள் ரஞ்சிதத்தை அவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார். ரஞ்சிதம் அம்மா நல்லகண்ணுவின் நிழலாக உடலும் உயிருமாக நகமும் சதையுமாக இருந்து 82 வயதில் இறந்து போனார் தனக்கு வாழ்க்கையில் தாங்க முடியாத இழப்பும் சோகமும் ஏற்பட்டது என்றால் அது தன் மணைவி ரஞசிதத்தின் மறைவினால்தான் என்றவர்.
தன் வாழ்நாளின் நிழலாக இருந்த மனைவி ரஞ்சிதத்தின் மறைவு அவரை நிலைகுலைய வைத்தது. ஆனாலும் மக்கள் பணி அவரை ஓயவிடவில்லை.அவரது 80-வது பிறந்தநாளில் கட்சி வழங்கிய ஒரு கோடி ரூபாய் நிதியை, மேடையிலேயே கட்சி நிதியாகத் திருப்பிக் கொடுத்தார்.நண்பர் ஒருவர் அன்பளிப்பாக வழங்கிய காரை, மறுநாளே கட்சி அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு, வழக்கம் போல அரசுப் பேருந்தில் பயணமானார்.
தமிழக அரசு வழங்கிய 'தகைசால் தமிழர்' விருதையும், அதன் 10 லட்ச ரூபாய் நிதியுடன் கூடுதலாகத் தனது சொந்தப் பணத்திலிருந்து 5 ஆயிரம் ரூபாயைச் சேர்த்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.
ஒரு மாநிலத்தின் மிக உயரிய தலைவராக இருந்தும், இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார். வீடு முழுக்க புத்தகங்களே அவரது சொத்து. அரசு அவருக்குச் சொந்த வீடு ஒதுக்க முன்வந்தபோது, 'இதை ஏற்றால் நான் வாழ்ந்த போராட்ட வாழ்வுக்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும்' என்று கூறி மறுத்துவிட்டார்.
ஆலய பிரவேசம்,பொதுவெளியில் செருப்பு அணிந்து நடக்கும் போராட்டம் போன்ற போராட்டங்களை முன்னெடுத்தவர்,மணல் கொள்ளைக்கு எதிராகவும், தாமிரபரணி ஆற்றைப் பாதுகாக்கவும் சட்டப் போராட்டங்கள் பல நடத்தியவர்,
101-வது வயதில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இன்று அவரது மூச்சு நின்றுபோனது, ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது. ஆனால், அங்கேயும் அவர் ஒரு பாடம் சொன்னார். தனது உடலை மருத்துவ ஆராய்ச்சி மாணவர்களுக்காகத் தானம் செய்து, தான் மறைந்த பிறகும் இந்தச் சமூகம் பயன்பெற வேண்டும் என்று நினைத்த அந்த மகாமனிதன் 'நிச்சயமான ஒரு அதிசயம்'.
எந்த அதிகாரத்திற்கும் பணியாத, எந்தப் புகழுக்கும் மயங்காத அந்த 'தகைசால் தமிழர்' ஆர்.என்.கே, ஒரு அதிசயமே
-எல்.முருகராஜ்

