PUBLISHED ON : மார் 02, 2026 06:23 PM

யுத்தங்கள் எப்போதும் வரைபடங்களை மாற்றியமைக்கின்றன, ஆனால் அவை அழிப்பது மனிதர்களின் வாழ்வாதாரத்தை மட்டுமல்ல, ஒரு தலைமுறையின் எதிர்காலத்தையும்தான். இன்று தெற்கு லெபனானில் வானத்திலிருந்து பொழியும் நெருப்பு மழையும், நிலத்தில் அதிரும் வெடிகுண்டுச் சத்தங்களும் ஒரு தேசத்தையே நிலைகுலையச் செய்துள்ளன.
வானில் எழும் இந்தப் புகை மண்டலங்கள் வெறும் வெடிமருந்தின் துகள்கள் அல்ல; அவை ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகள் எரிந்து சாம்பலாவதன் சாட்சி. உலக அரசியலில், சாதாரண மனிதனின் உயிர் மிக மலிவானதாகிவிட்டது.'
வீடுகள் நொறுங்கி, தெருக்கள் ரத்தக் கறையோடு காட்சியளிக்க, எஞ்சிய உயிரைக் காக்க மக்கள் கையில் கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு வெளியேறுகின்றனர். அப்படி ஒரு சிறிய ரக லாரியில் தஞ்சம் புகுந்த ஒரு குடும்பத்தின் காட்சி நெஞ்சை உலுக்குகிறது. அந்த வாகனத்தில் மூட்டை முடிச்சுகளுக்கு நடுவே, தங்களின் வேர்களைப் பிடுங்கிக்கொண்டு தலைநகர் பெய்ரூட்டை நோக்கி அவர்கள் பயணிக்கிறார்கள்.
இந்தக் கூட்ட நெரிசலில், லாரியின் ஒரு மூலையில் அமர்ந்திருக்கும் அந்தச் சிறுமி அல்லது சிறுவனின் விழிகளில் தேங்கியிருக்கும் மௌனம், ஆயிரம் கேள்விகளை எழுப்புகிறது.
'ஏன் எனது பொம்மைகளை எடுக்க விடவில்லை?'
'ஏன் என் நண்பன் இன்னும் வரவில்லை?'
'நாம் எங்கே போகிறோம்?'
அதிகாரப் பசிக்காகவும், எல்லைகளுக்காகவும் போர் புரியும் உலக நாடுகளே... இந்த குழந்தைகளின் சிதைந்த கனவுகளுக்கு யார் பொறுப்பு? பாதுகாப்பான கூரை இன்றி, கல்வி இன்றி, உறவுகளை இழந்து நடுரோட்டில் நிற்கும் இந்த மழலைகளுக்கு நீங்கள் தரும் பதில் என்ன? ஆயுதங்கள் அமைதியைக் கொண்டுவரும் என்று வாதிடும் உங்களின் தர்க்கங்கள், ஒரு குழந்தையின் கண்ணீருக்கு முன்னால் அர்த்தமற்றவை.
போர் என்பது வெறும் செய்திகளோ அல்லது வரைபடத்தில் மாறும் கோடுகளோ அல்ல; அது ரத்தமும் சதையுமான மனிதர்களின் வலி. தெற்கு லெபனானிலிருந்து இடம்பெயரும் ஒவ்வொரு குழந்தையும் உலக மனசாட்சியிடம் ஒரு கேள்வியைக் கேட்டுக்கொண்டே செல்கிறது. அந்தக் கேள்விக்கு 'அமைதி' ஒன்றே தீர்வாக இருக்க முடியும். இல்லையெனில், நாம் விட்டுச் செல்வது ஒரு சுடுகாடாக மட்டுமே இருக்கும்.
தெற்கு லெபனானிலிருந்து தப்பித்து தலைநகர் பெய்ரூட்டை நோக்கி மக்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில், அங்கேயும் மரணம் அவர்களைத் துரத்துகிறது. பெய்ரூட்டின் மக்கள் நெருக்கம் மிகுந்த தெற்குப் புறநகர்ப் பகுதியான தாஹியே மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் இடைவிடாது குண்டுகளைப் பொழிகின்றன. வானுயர எழும் கரும்புகை மண்டலம், அந்த இடத்தின் பேரழிவை ஊர்ஜிதப்படுத்துகிறது.
அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் என அனைத்தும் ஒரு சில நிமிடங்களில் தரைமட்டமாக்கப்படுகின்றன. குண்டுவெடிப்பின் அதிர்வில் ஜன்னல் கண்ணாடிகள் சிதறுவதும், கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகளைப் போலச் சரிவதும் அந்தப் பகுதியை ஒரு போர்க்களமாக மாற்றியுள்ளது. புகையும் தூசியும் சூழ்ந்த அந்தச் சூழலில், மீட்புப் படையினர்கூட உள்ளே நுழைய முடியாத அளவிற்குத் தாக்குதலின் வீரியம் உள்ளது.
மக்களின் அவலநிலை:தெற்கிலிருந்து தப்பியோடி வந்து பெய்ரூட்டில் அடைக்கலம் புகுந்தவர்களுக்கு இது மற்றுமொரு பேரதிர்ச்சி. 'எங்கு சென்றாலும் மரணம் எங்களைத் துரத்துகிறதா?' என்ற ஏக்கத்துடன் மக்கள் அலறிக் கொண்டு வீதிக்கு வருகிறார்கள். கரும்புகை கவிழ்ந்த வானம், அந்தத் தேசத்தின் இருண்ட காலத்தைக் குறிப்பதாக உள்ளது.
-எல்.முருகராஜ்

