PUBLISHED ON : ஜன 13, 2026 04:11 AM

'இதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியாது; விரைவில் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்...' என, காங்கிரஸ் கட்சிக்குள் கலகக்குரல் எழுந்துள்ளது.
தொடர்ச்சியாக மூன்று லோக்சபா தேர்தல்களில், காங்., தோல்வியை தழுவியுள்ளது; பல மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுத்துள்ளது. தற்போது தெலுங்கானா, கர்நாடகா மற்றும் ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.
காங்கிரசின் தேசிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பதவி வகித்தாலும், முக்கிய முடிவுகளை ராகுல் தான் எடுக்கிறார். அவரை சுற்றி தான், காங்கிரஸ் அதிகார மையம் செயல்படுகிறது.
இதனால், காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள அதிருப்தி கோஷ்டியினர், ராகுலுக்கு எதிராக குரல் எழுப்ப துவங்கியுள்ளனர். ஏற்கனவே, சசி தரூர், திக்விஜய் சிங் போன்ற மூத்த தலைவர்கள், கட்சியின் செயல்பாடுகள் குறித்து வெளிப் படையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரசின் புதிய தலைவராக, ராகுலின் சகோதரியும், கேரள மாநிலம், வயநாடு தொகுதி எம்.பி.,யுமான பிரியங்காவை தேர்வு செய்ய வேண்டும் என, அதிருப்தி கோஷ்டியினர் முணுமுணுக்க துவங்கி உள்ளனர்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள், அடுத்த சில மாதங்களில் நடக்கவுள்ளன.
'இந்த தேர்தல் முடிவுகள் வெளியானதும், காங்கிரஸ் கட்சியின் தலைவராக பிரியங்காவை நியமிக்க வேண்டும்...' என, அதிருப்தி கோஷ்டியினர் கூறி வருகின்றனர்.

