PUBLISHED ON : ஜன 14, 2026 03:59 AM

'உணர்ச்சிவசப்பட்டு பேசியதற்காக, பதவிக்கே வேட்டு வைத்து விடுவர் போலிருக்கிறதே...' என கவலையில் ஆழ்ந்துள்ளார், மஹாராஷ்டிரா துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார்.
இங்கு, முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித் பவார், துணை முதல்வராக பதவி வகிக்கிறார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியை நிறுவியவர், சரத் பவார். கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இரண்டு ஆண்டுகளுக்கு முன், அந்த கட்சியில் இருந்து சரத் பவாரின் சகோதரர் மகன் அஜித் பவார் வெளியேறினார். தேசியவாத காங்கிரஸ் கட்சி, தற்போது அஜித் பவாருக்கு சொந்தமாகி விட்டது. சரத் பவார், சரத் சந்திர பவார் தேசியவாத காங்., என்ற கட்சியின் தலைவராக உள்ளார்.
இந்நிலையில், புனே உள்ளிட்ட சில மாநகராட்சிகளுக்கு நாளை தேர்தல் நடக்க உள்ளது. இதில் வெற்றி பெறுவதற்காக, இரண்டாக பிளவுபட்டிருந்த தேசியவாத காங்கிரஸ் ஒன்றாக இணைந்துள்ளது. 'தொண்டர்களின் விருப்பத்துக்கு இணங்க, கட்சி ஒருங்கிணைந்துள்ளது...' என, அஜித் பவார் தெரிவித்திருந்தார்.
இதனால் கடுப்பான பா.ஜ., சிவசேனா உள்ளிட்ட கட்சியினர், 'அப்படியானால் துணை முதல்வர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்யட்டும்...' என, குமுறத் துவங்கினர்.
முதலுக்கே மோசம் வந்து விடுமோ என பயந்த அஜித் பவார், 'மஹாராஷ்டிராவில் பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை...' என, நழுவலாக பதில் அளித்துள்ளார்.

