PUBLISHED ON : ஜன 15, 2026 02:09 AM

'இழந்த செல்வாக்கை மீட்பதற்காக, மீண்டும் மொழி பிரச்னையை கையில் எடுக்கிறார் போலிருக்கிறது...' என, மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே பற்றி கூறுகின்றனர், பிற கட்சியினர்.
சிவசேனா கட்சி நிறுவனரான, மறைந்த பால் தாக்கரே அரசியலுக்கு அடி எடுத்து வைத்த காலத்தில், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், மும்பையில் செல்வாக்குடன் இருந்ததால், அவர்கள் மீது வெறுப்பு பிரசாரத்தை மேற் கொண்டார்.
'லுங்கி கட்டிய தென் மாநிலத்தவர்களை, மஹாராஷ்டிராவை விட்டு விரட்டியடிப்போம்...' என பால் தாக்கரே செய்த அரசியல், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த பால் தாக்கரேயின் சகோதரர் மகன் தான், ராஜ் தாக்கரே. இவர், தனி கட்சி துவங்கி, 20 ஆண்டுகளாகியும், இதுவரை எந்த தேர்தலிலும் சொல்லிக் கொள்ளும்படியாக வெற்றி பெற்றது இல்லை. இந்நிலையில், மஹாராஷ்டிராவில் வசிக்கும் ஹிந்தி பேசும் வட மாநிலத்தவர்களை, ராஜ் தாக்கரே அவதுாறாக பேசத் துவங்கியுள்ளார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராஜ் தாக்கரே, 'மஹாராஷ்டிராவில் வசிக்கும் உத்தர பிரதேசம், பீஹாரைச் சேர்ந்த தொழிலாளர்கள், எங்கள் மீது ஹிந்தியை திணிக்க முயன்றால், அவர்களை விரட்டியடித்து எட்டி உதைப்பேன்...' என, ஆவேசமாக கூறினார்.
இதை கேட்டு, 'ராஜ் தாக்கரே இன்னும் திருந்தவில்லையா...?' என ஆதங்கப்படுகின்றனர், மற்ற கட்சியினர்.

