PUBLISHED ON : மார் 31, 2025 12:00 AM

'எதிர்க்கட்சியினரின் பிரசார வேகத்தை பார்த்தால், சற்று நடுக்கமாக தான் உள்ளது...' என புலம்புகிறார், பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார்.
பீஹாரில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது.
லாலுவுக்கு வயதாகி விட்டதால், அவரது மகன் தேஜஸ்வி யாதவ், கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார். இங்கு அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தான் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனினும், தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, பா.ஜ.,வும், ஐக்கிய ஜனதா தளமும் இணைந்து ஆட்சி அமைத்துள்ளன.
இந்த தேர்தலில் அதுபோன்ற தவறு நடந்து விடக் கூடாது என்பதில் தேஜஸ்வி யாதவ் தீவிரமாக உள்ளார். இதற்கான பணிகளில் அவர் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
நிதிஷ்குமார் மீது, 'ஊழல் குற்றச்சாட்டு இல்லாதவர்' என்ற நற்பெயர் உள்ளது. அதை அடித்து நொறுக்கும் வகையில், 'ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதில் நிதிஷ்குமாரும், அவரது கட்சியினரும் பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளனர்...' என, தொடர்ந்து கூறி வருகிறார், தேஜஸ்வி யாதவ்.
துவக்கத்தில் இதை பொருட்படுத்தாமல் இருந்த நிதிஷ், இப்போது சற்று மிரளத் துவங்கியுள்ளார். 'பொய்யோ, உண்மையோ... ஒரு விஷயத்தை திரும்ப திரும்பக் கூறினால், அதை மக்கள் நம்பி விடுவரே...' எனக் கவலைப்படுகிறார்.