PUBLISHED ON : ஜன 24, 2025 12:00 AM

'தேர்தலில் வெற்றி பெறப்போவது மண்ணின் மைந்தனா, முன்னாள் முதல்வர்களின் மைந்தர்களா...' என்ற கோஷம், டில்லி சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியினரால் பலமாகவே எழுப்பப்படுகிறது.
இங்கு, முதல்வர் ஆதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. பிப்., 5ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
இங்குள்ள புதுடில்லி சட்டசபை தொகுதியில், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், நான்காவது முறையாக போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து, பா.ஜ., சார்பில் டில்லி முன்னாள் முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகன் பர்வேஷ் வர்மா போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர், மறைந்த ஷீலா தீட்ஷித்தின் மகன் சந்தீப் தீட்ஷித் களம் இறங்கியுள்ளார்.
'கெஜ்ரிவால் இந்த மண்ணின் மைந்தர். எனவே, முன்னாள் முதல்வர்களின் மகன்களுக்கு இங்கு வேலையில்லை...' என்கின்றனர், ஆம் ஆத்மி கட்சியினர்.
பா.ஜ.,வினரோ, 'எங்கள் கட்சியின் மூத்த தலைவரான, மறைந்த சுஷ்மா சுவராஜ் வெற்றி பெற்ற தொகுதி இது; எனவே, பர்வேஷ் வர்மாவுக்கு வெற்றி நிச்சயம்...' என்கின்றனர்.
'டில்லியில் அசைக்க முடியாத செல்வாக்குடன் வலம் வந்த ஷீலா தீட்ஷித்தின் மகன், சந்தீப் தீட்ஷித் வெற்றி பெறுவது உறுதி...' என்கின்றனர், காங்கிரஸ் கட்சியினர்.
டில்லி மக்களோ, 'இவங்க அலப்பறை தாங்க முடியலையே; பேசாமல், 'நோட்டா'வை ஜெயிக்க வைத்து விடுவோமா...?' என, எரிச்சலுடன் கூறுகின்றனர்.

